15 09 2021 பெண்களுக்கான இடஒதுக்கீடு 40%ஆக உயர்வு, குழந்தை திருமணங்கள் குறையும், அரசு ஊழியர்கள் வரவேற்பு, quota for women, tamilnadu reservation, dmk, jacto jeo
தமிழக அரசு, அரசுப் பணிகளில் அளிக்கபடும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30% லிருந்து 40% ஆக உயர்த்தியுள்ளது. திங்கள்கிழமை சட்டப்பேரவையில், இந்த அறிவிப்பை வெளியிட்ட மாநில நிதி அமைச்சர் மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாற்றத்தை ஏற்படுத்துவதில் பாலின சமத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அந்த அடிப்படையில், பெண்களுக்கு அரசுப் பணிகளில் ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழக அரசு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்றும் கூறினார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அளித்துள்ள 2017-18ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8.8 லட்சம் ஊழியர்களில் 2.92 லட்சம் பெண்கள் பணிபுரிகிறார்கள். அரசு ஊழியர்களில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30%லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது குறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா. தாஸ் கூறுகையில், “அரசுப் பணிகளில் வழங்கப்படும் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தி அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். சமூக நீதியை தொடர்ந்து இந்த அரசு பாதுகாத்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக் கல்வியில் பெண் ஆசிரியைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். பெண்களை ஆசிரியர் பணியில் அறவணைக்க முடியும் என்ற யதார்த்தத்தை அவர் கொடுத்தார்கள். ஆசிரியர் துறையில் அந்த அறிவிப்பு பொருத்தமானதாக இருந்தது. பெண்களுக்கான கல்வி மேம்பாட்டில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள். அது வேலைவாய்ப்பிலும் பிரதிபலிக்கும்போது வரவேற்கிறோம். அதில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றில் பணியில் பெண்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இத்தகைய துறையில் பெண்களை கொண்டுவந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.
வருவாய் துறையில் பெண்கள் கால நேரம் இல்லாமல் பணி செய்கிறார்கள். அவர்களுக்கு கால நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் காலி பணியிடத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். பெண்களுக்கு 40%ஆக உயர்த்துவதினால் மட்டுமே இந்த துறைகள் எல்லாம் சரியாகிவிடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்பவில்லை. குறிப்பாக அடித்தளத்தில் வாட்ச்மேன், பெருக்குனர், இரவு காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். போக்குவரத்து துறையில் பெண்களை ஓட்டுநர்களாகவும் கொண்டுவரலாம். காலி பணியிடத்தை வெளிப்படைத் தன்மையில் முழுமையாக நிரப்ப வேண்டும். கல்வித் துறையில் அதை முழுமையாக செய்திருக்கிறார்கள். இன்னும் செய்ய வேண்டும். இந்த அறிப்பு பெண்களுக்கான கல்வி கற்றலில், குறிப்பாக கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் பின் தங்கிய மக்கள். எஸ்சி, எஸ்டி மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வாய்ப்பாக இருக்கும். அந்தந்த பகுதிகளில் இருப்பவர்களை பணியில் அமர்த்தினால் அது முழு பலனை அளிக்கும். அரசுப்பணிகளில் ஒவ்வொரு துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றால் வேலை வாய்ப்பில் மட்டுமல்ல, பெண்கள் படிப்பதனால் ஒரு பலன் இருக்கிறது என்று ஒரு இலக்குடன் படிக்க வருவார்கள். மேலும், இந்த அறிவிப்பு மூலம் பெண்களுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவது குறையும். அதனால், தமிழக அரசு, அரசுப் பணிகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை 30%லிருந்து 40%ஆக உயர்த்தி அறிவிப்பதை வரவேற்கிறோம்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-increases-quota-for-women-in-govt-jobs-from-30-per-cent-to-40-per-cent-govt-staffs-welcomes-341525/