8% கிராமப்புற குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாதங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் ஆன்லைன் கல்வி கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் கல்வி குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. மேலும், தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற வழிவகுத்துள்ளது.
தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் 17 மாத ஊரடங்கின் போது அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். குடும்ப வருவாய் குறைவு, ஆன்லைன் கல்வி மீது குழந்தைகளுக்கு ஈடுபாடு இல்லாதது போன்ற காரணங்களால் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். பொருளாதார நிபுணர்கள் ஜீன் ட்ரேஸ், ரீதிகா கெரா மற்றும் ஆராய்ச்சியாளர் விபுல் பைக்ரா ஆகியோரின் மேற்பார்வையில் சர்வே நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் அசாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டது.
நகர்புறங்கள், கிராமம், குக்கிராமங்களில் வசிக்கும் 1400 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 60% குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றன. மேலும் 60% தலித் சமூகங்களைச் சேர்ந்தவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு குறிப்பிட்ட அளவே சென்றடைகிறது என்பதை சர்வே கூறுகிறது. நகர்ப்புறங்களில் 24% மற்றும் கிராமப்புறங்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைனில் தினந்தோறும் தவறாமல் படித்து வருகிறார்கள். ஸ்மார்ட் செல்போன் இல்லாத காரணத்தால் நிறைய பேரால் படிக்க முடியவில்லை என்று சர்வே கண்டறிந்துள்ளது.
ஸ்மார்ட்போன் உள்ள வீடுகளில் கூட, ஆன்லைன் கற்றல் வளங்களை அணுகும் குழந்தைகளின் விகிதம் நகர்ப்புறங்களில் வெறும் 31% மற்றும் கிராமப்புறங்களில் 15% ஆக உள்ளது. ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் பெரும்பாலும் வீடுகளில் உள்ள வேலை செய்யும் பெரியவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பாக இளைய உடன்பிறப்புகளுக்கு ஸ்மர்ட்போன் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் படிப்பு பொருட்களை அனுப்புவதில்லை அல்லது பெற்றோருக்கு இதுகுறித்து தெரியாமல் இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
சர்வே எடுக்கப்பட்ட 1,400 குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவால் பள்ளிகள் மூடத்தொடங்கியபோது தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். இதில் நான்கில் ஒரு பங்கினர் ஆகஸ்ட் 2021 க்குள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது பல பள்ளிகள் இடமாற்ற சான்றிதழை தருவதற்கு முன்பு அனைத்து நிலுவையில் உள்ள கட்டணத்தையும் செலுத்துமாறு கூறுகிறது. இந்த நிலைமையை சமாளிக்க பெற்றோர்கள் போராடி வருகின்றனர். இவர்களால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
அதேபோன்று அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் அதனை மாற்றி உணவு தானியங்களாகவோ பணமாகவோ வழங்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. ஆனால் இந்த விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதை சர்வே காட்டுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் 20 சதவீத நகர்ப்புற மாணவர்கள் மற்றும் 14% கிராமப்புற மாணவர்கள் தானியங்கள் மற்றும் பணம் போன்றவற்றை பெறவில்லை.
மாணவர்களின் கற்றல் திறன் பற்றிய ஆய்வு அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது. 5 ஆம் வகுப்பில் படிக்கும் பாதியளவு மாணவர்களால் மட்டுமே 2ஆம் வகுப்புக்கான பாடங்களை படிக்க முடிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் ஊரடங்கால் தங்கள் குழந்தையின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குறைந்துவிட்டதாக உணர்கிறார்கள். கற்றல் இடைவெளி, வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் ஏற்பட்டுள்ள சரிவு “பேரழிவிற்கான ஆரம்பம்” என்று அறிக்கை கூறுகிறது.
உதாரணமாக, ஊரடங்கிற்கு முன்பு கிரேடு 3ல் ஒரு குழந்தை சேர்க்கப்படுகிறது. ஆனால் அதன் கற்றல் திறன் கிரேடு 2 ஐ தாண்டி பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஊரடங்கில் தற்போது கிரேடு 1 என்ற அளவிற்கு திறன் உள்ளது. ஆனால் தற்போது கிரேடு5ல் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கும். இதனை சரிசெய்வதற்கு பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/corona-lockdown-8-rural-kids-in-online-classes-big-shift-out-of-pvt-schools-339513/