தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆர்.என். ரவி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. இவர் 1976ம் ஆண்டு கேரள மாநில பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
ஆர்.என். ரவி கேரளாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
உளவுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என். ரவி 2018ம் ஆண்டு அக்டோபரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை (செப்டம்பர் 09) உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் நிரந்தர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அஸ்ஸாம் மாநில ஆளுநராக உள்ள ஜெகதீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பணிக்கு கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என்று பதிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/rn-ravi-appointed-as-new-governor-of-tamil-nadu-340299/