கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க மத்திய – மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி திட்டம் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாளை தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 1000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி முகாம் காலை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இந்த சிறப்பு முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாம் மூலம் சென்னையில் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ள தாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தலா 600 மருத்துவர்களையும் செவிலியரையும் இப்பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாகவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 5,800 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகராட்சி மூலம் 43 லட்சத்து 71 ஆயிரத்து 309 தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-tomorrow-tn-to-host-mega-vaccine-camp-says-health-secretary-340655/