Tamil Nadu transport workers staged a protest : அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களை நடத்துநர்கள் தரக்குறைவாக பேசினால் அவர்களை தாக்குங்கள் என்றும், பணியில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று, அமைச்சரின் பேச்சைக் கண்டித்து தஞ்சையில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை அன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தத்தில் தொமுச உள்ளிட்ட பல சங்கங்களும் பங்கேற்றனர். அதிகாலை 5 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார், கழக மேலாளர்கள் ராஜசேகரன், திருஞானம் உள்ளிட்டோர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மீண்டும் காலை 07:15 மணிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-transport-workers-staged-protest-against-minister-duraimurugan-controversial-speech-349716/