வியாழன், 21 அக்டோபர், 2021

மத்திய அமைச்சர் பணம் பேரம் நடத்தியதாக பகீர் தகவல்

 மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர தோமருடன் நிஹாங் பிரிவு தலைவர் பாபா அமன் சிங் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின்போது போராட்டக் களத்திலிருந்து நிஹாங் குழுவினர் வெளியேற மத்திய அரசு சார்ப்பில் பணம் பேரம் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த புகைப்படத்தில், முன்னாள் பஞ்சாப் போலீஸ் அதிகாரி குர்மீத் சிங் பிங்கி,பாஜக தலைவர் ஹர்விந்தர் கரேவால் ஆகியோர் இருந்தார். இச்சந்திப்பானது இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

புகைப்படம் குறித்து விளக்கமளித்த அமன் சிங், ” விவசாயிகள் போராட்ட களத்தை விட்டு வெளியேற 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறினர். அத்துடன் கூடுதலாக ரூ. 1 லட்சம் எங்கள் இயக்கத்துக்கு அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். சிங்கு எல்லை விவசாயிகள் போராட்ட களத்தில் இருப்பதா இல்லையா என்பது அக்டோபர் 27 ஆம் தேதி கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விவசாய துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்கவில்லை.

பின்னர், குர்மீத் சிங்கை தொடர்பு கொண்ட போது, ” ஆகஸ்ட் மாதத்தில் நானும் பாபா அமனும் அமைச்சரின் வீட்டிற்கு சென்றது உண்மை தான். ஆனால், நான் தனிப்பட்ட வேலைக்காக சந்திக்கச் சென்றேன். நிஹாஹ் தலைவர் வேளாண் மசோதா குறித்து கலந்துரையாடினார். ஆனால், என் முன்னால் அவரிடம் பணம் பேரம் பேச்சு நடைபெறவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது தெரியவில்லை” என்றார்.

வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராடி கொண்டிருக்கும் விவசாயச் சங்கங்களின் தலைவர்களை தோமர் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையில், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, “தோமருடன் அமன் சிங் இருக்கும் புகைப்படம் மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலித் சீக்கியர் கொலை வழக்கில் குற்றவாளியைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் அதே தலைவர் தான்.

மத்திய அமைச்சருடன் நிஹாங் குழுவை சேர்ந்த தலைவர் ஒருவர் இருப்பது, அந்த கொலை சம்பவத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

விவசாயிகள் போராட்டக் களத்தில் இருக்கும் ஒருவர், மத்திய அமைச்சரை சந்தித்ததை குறித்து விவசாயிகள் சங்கங்களுக்கு தகவல் தெரிவிப்பது கடமையாகும்.ஆனால் மறைத்தது, மக்கள் மனதில் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புள்ளது. இதை தீர்ப்பது அவர் கடமையாகும். சீக்கியர் கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்கப் பஞ்சாப் அரசு தயாராக உள்ளது” என்றார்.

சிங்கு எல்லையில் நடந்த கொலையில் “ஏஜென்சிகளின்” பங்கு இருக்கலாம் என்று முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

சிங்கு பகுதியில், லக்பீர் சிங் என்ற தலித் சீக்கியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு நிஹாங் சீக்கியக் குழு பொறுப்பேற்றுள்ளது. சீக்கிய மதத்தின் புனித நூலை அவமதித்ததால் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக நிஹாங் அமைப்பைச் சேர்ந்த சரவ்ஜித் சிங் என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.

source https://tamil.indianexpress.com/india/nihang-sect-chief-photo-with-union-minister-tomar-creates-controversy-357797/