28 10 2021
பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்கும் வகையில் தமிழக முதல்வரின் இல்லம் தேடி கல்வி என்ற தி்ட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம அருகே முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களின் கற்றல் செயலபாடுகள் நடைபெறும். விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம், மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்த்த தன்னார்வலர்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆனால் இத்திட்டம் ஆர்எஸ்எஸ் கல்விக்கொள்கையை மறைமுகமாக திணிப்பதாகும் இதனை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் துணைபோகக்கூடாது என்று திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு – தி.மு.க. அரசு , குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும் , சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ் . கொள்கைப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே அறிவித்துள்ளது மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது
இந்தநிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ , தெரியாமலோ ‘ பழைய கள் புதிய மொந்தை ‘ என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது அறிய முற்போக்குச் சிந்தனையும் , மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாய் உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேத னையைத் தருவதாக உள்ளது . அதிர்ச்சியாகவும் உள்ளது .
ஆர் .எஸ் . எஸ் . பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவே ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் !’ ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ‘ திறனறித் தேர்வு‘ பற்றி சில நாள்களுக்கு முன் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம் ; அதுபற்றிய விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அது சாதாரணமாக மதிப்பெண் போடப்பட்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது -அதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற ஒரு விளக்கத்தைக் கூறினாலும்கூட நம்மால் அது கேட்டு திருப்தி அடைய முடியவில்லை . காரணம் , அத்திட்டத்தை இயக்குபவர்கள் அதில் சி.பி.எஸ்.இ. என்பது குறிப்பிடப்பட்டு, மறை முகமாக நமது மாநில உரிமையில் தலையிட்டு அதன் மூலம் கல்விக் கொள்கையில் செயலாக்கவே என்பது விளங்குகிறதே ! ( சிறு வயதில் தேர்வு என்பது அச்சுறுத் துவது ) அதுபோலவே , இப்போது ‘ இல்லம் தேடி கல்வித் திட்டம் ‘ என்பதும் ஆர் . எஸ் . எஸ் . பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும் .
‘கற்றல் – கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை -2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது . இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க , பிளஸ் டூ படித்தவர்களையும் , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம் ” என்று கூறியிருப்பது , யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து , பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில் , மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ ( ஆர் . எஸ் . எஸ் .) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம் . அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா ? ஏற்கெனவே நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது .
அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு , அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து , அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம். கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால் , இதில் அவசரக்கோலம் ; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம் .
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் துவக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று , மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை ; ஆனால், மருத்துவம் , கல்வி , கூட்டுறவு , விவசாயம் எல்லாவற்றையும் மாநில ஒத்திசைவுப் பட்டியல்களில் இருந்து எடுத்துவிட்டு, ஒன்றிய அரசு பட்டியலிலேயே சேர்த்து விட்டதைப்போலவே – நாட்டில் கூட்டாட்சி நடைபெறவில்லை – ஒற்றை ஆட்சியே நடைபெறுகிறது என்பது போன்ற ஒரு நடைமுறையை , ஒன்றிய பா . ஜ . க . அரசு இந்தக் கல்வித் திட்டங்கள் , மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள்மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது !
இதில் முதல் பலி , கல்வி , மருத்துவம் ; எதில் ‘ திராவிட மாடல் ‘ ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ , அதனைக் குறி வைக்கும் நிலை .எனவே , உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து , தமிழ்நாட்டு மாணவர்களை – கல்வியால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும் ! அதற்குள் இப்படி விவாதத்திற்குரியவற்றில் ஈடுபடாமல், பள்ளிக் கல்வித்துறை செயல்படுவதும் மிகவும் முக்கியம் . முற்போக்காளர்கள் , கல்வியாளர்கள் , ஆசிரியப் பெருமக்கள் , பெற்றோர் , சமூகநல ஆர்வலர்கள் ஆகி யோரது பொறுப்புமிக்க கவலையைப் போக்கவேண் டியதும் முக்கிய கல்வித் தொண்டாகும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dravida-leader-k-veeramani-say-about-illam-thedi-kalvi-361280/