புதன், 27 அக்டோபர், 2021

நீர்விழ்ச்சியில் மாட்டிகொண்ட தாய், மகளை காப்பாற்றும் வனத்துறை அதிகாரிகள்;

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆனைவாரி முட்டல் நீர்விழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, பாறையின் மீது ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் தமிழக வனத்துறையினர் காப்பாற்றும் வியத்தகு வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளின் ஒரு பகுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த இடம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்த வீடியோவில், ஒரு பெண் பாறையின் மீது தனது குழந்தையுடன் அமர்ந்திருப்பதைக் காணும் போது, ​​ஒரு ஆண் ஒருவர் நீர்வீழ்ச்சியில் ஏறிக்கொண்டிருந்தார். நீர்வீழ்ச்சியின் மறுபுறம் நின்று கொண்டிருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டது மற்றும் அந்த நபரை அவர் விழக்கூடும் என்பதால் ஏற வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

ஒரு கயிற்றைப் பயன்படுத்தி, இரண்டு வனத்துறை அதிகாரிகள் குழந்தையையும் பின்னர் பெண்ணையும் கவனமாக தூக்குவதைக் காணலாம். தாயும், குழந்தையும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகத் தோன்றிய நிலையில், மீட்புப் பணியில் வனத்துறை அதிகாரிகளுக்கு உதவிக் கொண்டிருந்த இருவர் திடீரென தடுமாறி தண்ணீரில் விழுந்தனர். வீடியோ இந்த இடத்தில் முடிவடைந்தாலும், இருவரும் ஆற்றின் மறுகரைக்கு நீந்திச் சென்று பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலரையும் அதிகாரிகள் மீட்டனர்.

சேலம் மாவட்ட வன அலுவலர் கே.கௌதம் indianexpress.com விடம் கூறுகையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை. “ஆனைவாரி முட்டல் ஒரு சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம். கல்வராயன் மலையில் இருந்து பெய்யும் மழை நீர் இங்கு அருவியாக வருகிறது. இது ஆத்தூர் மண்டலம்; இந்த மலையின் மறுபுறம் உள்ள கார்மந்துறை பகுதியில் மழை பெய்தால், இங்கிருப்பவர்களுக்கு அது தெரியாது. 20-30 நிமிடங்களில் அந்த பகுதிக்கு திடீர் வெள்ளம் வந்தது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கும். இம்முறை தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தது. மக்கள் அந்தப் பக்கத்தில் சிக்கிக்கொண்டனர். எந்த பாதையும் இல்லை, அவர்கள் ஒரு கயிறு மூலம் மட்டுமே மறுபுறம் செல்ல முடியும். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு எங்கள் அதிகாரிகள் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்ததால், அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். நாங்கள் உடனடியாக மக்களை காலி செய்து அப்பகுதியை மூட உத்தரவிட்டோம்,” என்றார்.

வானிலை காரணமாக ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி, வழுக்குபாறை மற்றும் ஏற்காட்டில் உள்ள மேலும் ஒரு சுற்றுலா தலத்தை மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளதாக வன அலுவலர் தெரிவித்தார். மேலும், “கள அறிக்கை இன்னும் என்னிடம் வரவில்லை. அதன் பின்னரே மீட்கப்பட்டவர்களின் விவரம் தெரியவரும்,” என்றும் வன அலுவலர் கௌதம் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-mother-baby-waterfall-rescue-video-salem-360751/