மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் புகார் கூறியிருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அதே பெண்ணுடன் அமர்ந்து கோயில் அன்னதானம் சாப்பிட்டார். மேலும், நரிக்குறவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பலரையும் கண்கலங்கச் செய்தது. சமூகநீதி பேசும் மாநிலத்தில், நரிக்குறவர் என்பதால், கோயில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். மாமல்லபுரம் பகுதியில் மணிகளை விற்பனை செய்து வந்த அந்த பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: “சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்களால் அந்த பேருந்தில் பயணிக்க முடியவில்லை. பேருந்தை நிறுத்த முயன்றால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர். சரி அதைக்கூட விடுங்க. கோயிலில் இலவசமாக அன்னதானம் அளிக்கிறார்கள். மற்றவர்களை போல நாங்களும் உணவுக்காக வரிசையில் நின்றால் எங்களை கோயிலை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள். கேள்வி கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள். காலம் இப்படியே இருக்காது. நாங்களும் வளர்ந்து காட்டுவோம்” என்று கூறியிருந்தார்.
நரிக்குறவர் என்பதால் கோயில் அன்னதானம் சாப்பிடுவதற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்று அந்த பெண் வீடியோ மூலம் தெரிவித்த புகார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கவனத்திற்கு சென்றதையடுத்து, அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் அமைச்சர் சேகர் பாபு, இன்று அதே மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் அமர்து கோயில் அன்னதானம் சாப்பிட்டுள்ளார். மேலும், நரிக்குறவர்களுக்கு கோயில் அன்னதானம் பரிமாறச் செய்துள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். திருக்கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. இன்று பொதுமக்களோடு அன்னதான உணவு உட்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரிக்குறவர் என்பதால் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அதே பெண்ணுடன் அதே கோயிலில் அமைச்சர் சேகர் பாபு அருகில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். மேலும், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோயிலில் அன்னதானம் உணவு பரிமாறப்பட்டது. கோயில் அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது என்று கூறிய அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sekar-babu-had-food-with-narikuravar-tribal-woman-at-temple-362103/