திங்கள், 25 அக்டோபர், 2021

தீபாவளி ஸ்வீட் ஊழல்? டெண்டர்களை ரத்து செய்து ஸ்டாலின் நடவடிக்கை

 போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். மொத்தம் 100 டன் இனிப்புகள் வாங்க டெண்டர் விடும் நடைமுறை இருந்து வருகிறது. தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன.

ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது

இதன் காரணமாக, மிகப்பெரிய நிறுவனம் தான் டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. இதற்கிடையில், ஸ்வீட்களை தயாரிக்கும் ஆவின் நிறுவனம் இருக்கும் போது, ஏதற்கு தனியாரிடம் டெண்டர் விட வேண்டும் என கேள்வி சமூக வலைதளத்தில் பரவ தொடங்கியது. இந்த டெண்டரில் ஊழல் நிகழ்வுதாகவும் பலரும் குற்றச்சாட்டி வந்தனர்.

இதற்கிடையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு ரூபாய் 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று அமைச்சர் ராஜகணப்பன் சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா என்பதை முதல்வர் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பி ட்வீட் செய்திருந்தார்.

சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திட, இறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. டெண்டர் விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்த முதல்வர் , அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்து, போக்குவரத்து ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் அரை கிலோ இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 24 10 2021 

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-orders-to-procurement-sweets-from-aavin-for-transport-employee-359815/