திங்கள், 25 அக்டோபர், 2021

ஷார்ப் ஷூட்டர்கள், டூவீலர் தடை, தடுப்பு காவல்

 மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசத்துக்கு அமித் ஷா முதல் முறையாகப் பயணம் மேற்கொள்கிறார்.

கட்டிடங்கள் மேலே ஷார்ப் ஷூட்டர்கள்,இரு சக்கர வாகனங்களுக்கு தடை, பொது பாதுகாப்பு சட்டத்தின்படி நூற்றுக்கணக்கானோர் தடுப்பு காவல் என ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு இரண்டு மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், ஷாவின் வருகை போது, எவ்வித தாக்குதலும் நடைபெறக்கூடாது என்பதற்காக உளவுத்துறையும், பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

ராஜ் பவன் மற்றும் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்திற்குச் செல்லும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஷா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 900 பேரை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவர்கள் கல் ஏறிபவர்களாகவும், போராளிகளின் உறவினர்களாகவும் கருதப்படுகின்றனர். அதில், பெரும்பாலானோர் PSA சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த சட்டத்தின்படி, ஒருவரை எவ்வித விசாரணையும் இன்றி ஒரு வருடம் வரை காவலில் வைக்கலாம்.

கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 50 பேர் மீது PSA கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீநகரில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு காவல்துறை அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகளிடம் அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும், நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் தொடர்பாகவே வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், உள் துறை அமைச்சரின் வருகைக்கும் இந்நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/snipers-and-two-wheelers-ban-ahead-of-amitsha-visit-to-kashmir/