தமிழகத்தில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் உள்துறை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக 12 வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த 12 வாகனங்களால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், முதல்வரின் வருகையை முன்னிட்டு பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி நடிகர் திலகம் சிவாஜி கனேசன் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்திற்கு சென்ற முதல்வர் சிவாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வரின் வருகையையொட்டி அன்று அடையார் மார்கமாக சென்ற வானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வாகனமும் சுமார் அரைமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை குறைக்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு, உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் முடிவில், முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6-ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் முதல்வரின் வாகனம் வரும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த தலைமை செயலாளர், டிஜிபி, மற்றும் உள்துறை செயலாளரின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும், அரசின் இந்த முடிவு நீதிபதிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பயனளிக்கும் என்றும், என்றும் கூறியுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-high-court-praise-to-tn-government-358163/