வெள்ளி, 29 அக்டோபர், 2021

முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன?

 Mullaiperiyar dam old dispute between Tamil Nadu Kerala : வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வருகின்ற நவம்பர் 10ம் தேதி வரை 139.50 அடி இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இந்த அணை அமைந்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள இந்த அணை, அதனை சுற்றி வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதே சமயம் அணையை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கும் தமிழகத்தில் அமைந்துள்ள 5 மாவட்ட மக்களின் உயிர்நாடியாக முல்லைப் பெரியாறு அமைந்துள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மேல்பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து திருப்பிவிடப்படும் நீர், வைகை ஆற்றின் கிளை நதியான சுருளியாற்றில் பாயும் முன், கீழ் பெரியாற்றில் (தமிழ்நாட்டால்) மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது, பின்னர் தேனி மற்றும் நான்கு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.08 லட்சம் ஹெக்டேர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை : தற்போது எழுந்துள்ள பிரச்சனை என்ன?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழு 139.50 அடி என்ற அனுமதிக்கப்பட்ட நீர்மட்டமாக பரிந்துரை செய்த பிறகு வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களும் இந்த குழுவின் பரிந்துரைப்படி செயல்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்பியது. உச்ச நீதிமன்றத்தை நாடி 2014ம் ஆண்டு அந்த அளவை உறுதி செய்தது. அதே சமயம் கேரளா 139 அடிக்குள் மாத இறுதி வரை நிர்ணயிக்கப்பட்ட விதி வளைவின்படி இருக்க வேண்டும் என்று விரும்பியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது. மழைப் பொழிவின் காரணமாக 142 அடியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க துவங்கியது அணை. வியாழக்கிழமை அன்று 138.15 அடியை எட்டியது. கேரளா அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக உறுதி செய்ய விரும்பியது. ஆனால் 2014ம் ஆண்டின் உத்தரவு தமிழகத்தை 142 அடி வரை உயர்த்த அனுமதித்தது.

இந்த முறை 139 அடி நீர்மட்டத்தை இருக்க வேண்டும் என்று விரும்பிய போது, கேரளா 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டியது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திடீரென வெளியேற்றப்பட்டது 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 142 அடி நீர்மட்டத்தை எட்டிய பிறகு அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் இடுக்கி நீர் தேக்கத்திற்கு சென்றது. ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் இடுக்கியில் இருந்து அவசர அவசரமாக மதகுகளின் வழியே நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

2021ம் ஆண்டு சூழல் ஒன்றும் வித்தியாசமானதாக இல்லை என்று கேரள அரசு தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அமைந்திருக்கும் அதே மாவட்டத்தில் தான் இடுக்கி நீர் தேக்கமும் அமைந்துள்ளது. இரண்டு வாரங்களாக மதகுகளின் வழியாக நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையிலும் கூட வியாழக்கிழமை அன்று தன்னுடைய 94% கொள்ளளவை எட்டியது. முல்லைப் பெரியாற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர், இடுக்கி நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அடுத்தது என்ன?

நீர்மட்டத்தை சீரமைப்பதன் ஒரு பகுதியாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை காலை முதல் மதகுகளின் வழியே நீரை வெளியேற்ற ஒப்புக் கொண்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் அதிகபட்ச நீர் அளவை வரையறை செய்து கொஞ்சம் கொஞ்சமாக கேரளா பகுதிக்கு நீரை வெளியேற்றவும் என்று கூறியிருந்தார். மதகுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து 35 கி.மீ அந்த பக்கம் அமைந்திருக்கும் இடுக்கி வரை, ஆற்றின் இருபக்கமும் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவிட்டுள்ளது கேரளா.

ஏற்கனவே இருக்கும் அணைக்கு பதிலாக புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சமீபத்தில் இந்த யோசனைக்கு தனது ஆதரவை தெரிவித்த நிலையில், அத்தகைய திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவைப்படும். புதிய அணை கட்டுவது, புதிய நீர்-பகிர்வு ஒப்பந்தத்திற்கான கோரிக்கையை எழுப்பும். தற்போது அணை நீர் மீது தமிழகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு தான் என்ன?

1886ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா , பெரியாறு நீர் திருவிதாங்கூருக்குப் பயன்படாது என்று கருதி ஆங்கிலேய அரசிடம் பெரியாறு குத்தகை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம், அந்த அணையின் நீரை தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில் உருவாக்கப்பட்டது. 20 வருட எதிர்ப்பிற்குப் பிறகு மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1895ம் ஆண்டில் இந்த அணை கட்டப்பட்டது. சென்னை அரசு 1959-இல் நீர் மின் உற்பத்தியை தொடங்கியது. அதன் திறன் 140 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.

அணை மீதான பாதுகாப்பு குறித்த கவலைகள் 1961ம் ஆண்டில் இருந்து மேலோங்கியது. கேரளா இந்த விவகாரத்தை மத்திய நீர் வாரியத்திற்கு 1961-ல் எடுத்துச் சென்றது. தமிழகம் மற்றும் கேரளம் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 1964ம் ஆண்டு 155 அடியில் இருந்து 152 அடியாக குறைத்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அளவை உயர்த்தக் கோரி தமிழகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கைக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்தது.

நீதிமன்ற போராட்டங்கள்

கடந்த காலங்களில் இரண்டு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு ஒன்றை நிர்ணயம் செய்தது.

2006ம் ஆண்டு, உச்ச நீத்மன்றம் தமிழகத்திற்கு நீரின் அளவை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. பலப்படுத்தும் பணியை முடித்து, நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரைத்தால், 152 அடியாக நீர்மட்டத்தை மீட்டெடுக்கலாம் என்று கூறியது. 2006 ஆண்டு மார்ச் மாதம், கேரள சட்டமன்றம் கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டம் 2003-இல் (Kerala Irrigation and Water Conservation Act, 2003) திருத்தம் செய்து, முல்லைப் பெரியாற்றை ‘அழிந்து வரும் அணைகள்’ அட்டவணையில் கொண்டு வந்து, அதன் சேமிப்பை 136 அடியாகக் கட்டுப்படுத்தியது. அதில் இருந்து பிரச்சனை அணையின் பாதுகாப்பு குறித்ததாக மாறியது.

2007ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆரம்ப பணிகளை துவங்கியது. தமிழகம் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது/ 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைத்தது. 2008 ஆம் ஆண்டில், ஐஐடி டெல்லியின் வெள்ள வழிப்பாதை ஆய்வில், அணை பாதுகாப்பற்றது என்பதைக் கண்டறிந்தது. 2009ம் ஆண்டு ஐ.ஐ.டி. ரூர்கீ, அணை நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் இருக்கிறது என்றும் பெரிய பூம்பத்தை தாங்கும் சக்தி இல்லை என்றும் கூறியது. 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கும் பணியில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு நீர்மட்டத்தை 142 அடியாக உறுதி செய்ய அனுமதி அளித்தது.

source https://tamil.indianexpress.com/explained/mullaiperiyar-dam-old-dispute-between-tamil-nadu-kerala-revived-after-recent-rains-361889/