மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை என்றும் தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக பொதுச் செயலாலரும் மாநிலங்களை எம்.பி.யுமான வைகோவின் வயது காரணமாக, மதிமுக கட்சியை வலுப்படுத்த அவருடைய மகன் துரை வைகோ மதிமுகவில் பொறுப்பெற்க உள்ளதாக ஒரு வாரமாக ஊடகங்களில் செய்திகள் வழியே பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை அறிவித்தார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதிமுகவில் துரை வைகோ தலைமைக்கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்திதான் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில், பதிவான 106 வாக்குகளில் துரை வைகோவுக்கு 104 வாக்குகள் கிடைத்துள்ளன. மதிமுகவின் சட்ட விதிப்படி நானே பொறுப்பு வழங்கியிருக்கலாம், ஆனால் வாக்கெடுப்பு நடத்தினேன். முழு நேர கட்சி பணிகளை துரை வைகோ மேற்கொள்வார்.
மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது. தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் துரை வைகோவுக்கு உள்ளது. 2 மூன்று ஆண்டுகளாக துரை வைகோ பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்தேன். ஆனால், முழுவதும் தடுக்க முடியவில்லை. எனக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தேன். தொண்டர்கள் தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர். துரை வைகோ தீவிர கட்சிப்பணியில் ஈடுபட்டுவந்தார். தொடண்டர்கள் விருப்பப்படி துரை வைகோ பொதுவாழ்வில் தன்னை இணைத்துள்ளார்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vaikos-son-durai-vaiyapuri-appointed-as-chief-secretary-of-mdmk-announced-by-vaiko-358220/