புதன், 20 அக்டோபர், 2021

இல்லம் தேடி கல்வி; அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் புதிய திட்டம்

 

தொற்றுநோயால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடையே எழுந்த கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்ய இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு திங்கட்கிழமையன்று, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் முன்னோடி திட்ட அடிப்படையில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் வெற்றியை பொறுத்து மீதமுள்ள மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஆரம்பத்தில், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு வாரங்களுக்கு தொடங்கப்படும். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து வகுப்புகளைத் தவறவிட்ட குழந்தைகளுக்கு கல்வித் திறன்களை வழங்குவதற்காக இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்கேற்புடன் இந்த நிதியாண்டில் இருந்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் இது மக்கள் இயக்கமாக மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் பள்ளிக் கல்வித் துறையை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்: illamthedikalvi.tnschools.gov.in.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாகப் பலர் பதிவு செய்ய முன் வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும். என தெரிவித்தார்.

மேலும், 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற வீதம் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். இந்த இணைய தளம் வழி கற்றல் வகுப்புகளை எல்லாம் அந்த அந்த பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/education-at-doorstep-to-address-learning-gap-among-govt-school-students-in-tamil-nadu-357559/