செவ்வாய், 26 அக்டோபர், 2021

கோட நாடு கொலை, கொள்ளை வழக்கு; கனகராஜின் சகோதரர் உட்பட இருவர் கைது

 

25 10 2021 கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பமாக, சாட்சியங்களைக் கலைத்ததாக ஜெயலலிதாவின்  கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து காவல்துறை மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கனகராஜ் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவருக்கும், நவம்பர் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து, கூடலூர் கிளை சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக, சயான் மற்றும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இதுகுறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் இந்த கொலையில் சிக்கினர். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கார் ஓட்டுநர் கனகராஜ் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்  சேலம் அருகே சாலை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி விபத்தில்  மரணம் அடைந்தார். அவரது மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது மரணம் விபத்தாக கருதி முடித்து வைக்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/two-arrested-in-kodanadu-case-including-kanagaraj-brother-360388/