திங்கள், 25 அக்டோபர், 2021

ஜி20, பருவநிலை மாநாடு

 

இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிலும், 

கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள 26-வது கட்சிகளின் மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது, ” ஜி20 நாடுகளின் 16-ஆவது மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தாலி பிரதமர் மேரியோ டிராகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, 29-ஆம் தேதி இத்தாலி செல்கிறார்.

மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்களும் பிற சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவது, பருவநிலை மாற்றம் பிரச்னைக்கு தீர்வு காண்பது, உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வறுமை, சமத்துவமின்மை பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது போன்ற விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்னைக்குத் தீர்வுகாணவும், பருவநிலை மாற்றம் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

அதன்பின்னர், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கிளாஸ்கோ செல்கிறார். அங்கு நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில், பருவநிலை மாநாட்டில் பங்கேற்க செல்கிறார். ஐ.நா. பருவநிலை மாற்ற செயல்திட்ட மாநாடு வரும் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனர். 2-ஆம் தேதி நடைபெறும் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

2015 இல் பாரிஸில் நடந்த COP21 இல் பிரதமர் கடைசியாக கலந்து கொண்டார். அப்போது பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/pm-modi-visit-italy-and-england-for-g20-and-cop-26-meet-359980/