புதன், 27 அக்டோபர், 2021

அரசுத் திட்டங்களின் நிலை பற்றி கேட்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி: தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு

 

தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ரிப்போர்டில், நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு

இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ. இறையன்பு, ஒவ்வொரு துறையிலும் உள்ள உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் அவர்களின் துறை குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆளுநர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எப்படி இயங்குகிறது, நலத்திட்டங்கள் என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார். இதனால் உங்கள் துறை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள். உங்கள் ரிப்போர்ட் விளக்கமாக இருக்க வேண்டும்.

தற்போது, ஒவ்வொரு துறையிலும் இருக்கும் உயர் அதிகாரிகளும் ரிப்போர்ட் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது, பல தலைவர்கள் அவரை சந்தித்து புகாரும் கோரிக்கையும் விடுத்துள்ளனர். முதலில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள், திமுகவுக்கும் எதிராகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து புகார் அளித்தனர். அடுத்ததாக, முதல்வர் மு.க ஸ்டாலின் சட்ட ஒழுங்கு முதல் நீட் தேர்வு ரத்து வரை ஆளுநரை சந்தித்து கலந்தாலோசித்தார்.

அதன்பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இத்தகைய பல்வேறு சந்திப்புகளால், தமிழ்நாடு அரசியல் களமே பரபரப்பாகக் காணப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-governor-has-sought-details-on-the-functioning-of-various-departments-360691/