மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றபோது, இந்து முன்னணியினர் கருத்தரங்கில் பங்கெற்க அனுமதியளிக்க கோரி பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மேலும் சர்ச்சையாகியுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மையம் மற்றும் சமூகவியல் துறையில் பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றும் புதிய விடியல் இதழின் ஆசிரியர் ரியாஸ் அஹமது உரையாற்றுவார் என்றும் அழைப்பிதழ் வெளியானதில் இருந்தே இந்துத்துவ அமைப்புகள் வைத்த விமர்சனங்களால் இந்த கருத்தரங்கம் கவனம் பெற்றது.
இந்த நிலையில், பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று (அக்டோபர் 27) கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது, இந்து முன்னணி மாநில செயலாலர் குற்றாலநாதன் தலைமையில், நிர்வாகிக்ள் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக பல்கலைக்கழத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, அவர்கள் கருத்தரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கே பரபரப்பு நிலவியது.
கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணியினா் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால், இந்தக் கருத்தரங்கில் மாணவா்களுக்கு மட்டும்தான் அனுமதி. வெளிநபா்களுக்கு அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், துணைவேந்தா் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை தெரிவித்தனா். இதனால், இந்து முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறியதாவது: “பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொள்ளலாம் என அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எங்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் அளிக்கப்படும்” என்று கூறினார். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே, பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் பேசிய புதிய விடியலின் ஆசிரியர், ரியாஸ் அஹமது பேசியதாவது: “கடவுளே இல்லை என்று கூறிய பெரியார் எப்படி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி எழலாம். சமூக முன்னேற்றத்திற்கும், கலாசாரம் முன்னேற்றத்திற்கும் ஒரு மதம் தடைபோடும் என்றால் அந்த மதம் வேண்டாம் என்று தான் பெரியார் சொன்னார் .இது இல்லாமல் எந்த மதம் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என்று பெரியார் சொன்னார். எனவே தீண்டாமை என்று சொல்லக்கூடிய புள்ளி தான் பெரியாரை இஸ்லாம் மதத்தோடு நெருக்கமாக்கியது. இஸ்லாமில் ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமை இல்லை. எனவே இப்படிப்பட்ட மதத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று பெரியார் சொன்னார்.
1947 ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் இன இழிவு ஒழிய இஸ்லாமிய நண்பன் என்ற தலைப்பில் பெரியார் பேசினார். இந்த இனத்துக்கான இழிவு ஒழிய வேண்டும் என்றால் அது இஸ்லாமால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார். இந்த மதம் தான் உங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் கண்ணியத்தை கற்றுக்கொடுக்கும் என்றார். பெரியாரை இஸ்லாமோடு ஒன்றாக இணைக்கும் புள்ளி இவைதான். பெரியாருக்கு முன்பே தீண்டாமையை எதிர்த்து யாரும் போராடவில்லையா என்று கேட்டால்; பலபேர் போராடினார்கள். அவர்கள் சட்ட ரீதியாகவும் சத்தியாகிரக ரீதியாகவும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அந்தப் போராட்டங்கள் தோல்வி அடைய அதிக வாய்ப்புகள் இருந்தன.
இது போல, பேசிக் கொண்டே இருந்ததால் திராவிடர் கழகத்திலிருந்தே பெரியாரை சிலர் எதிர்த்தனர். நீங்கள் இப்படி பேசுவதால் உங்கள் செல்வாக்கு குறைகிறது என்று பெரியாரிடம் தெரிவித்தனர். அதற்கு பெரியார் நான் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இதைச் சொல்லி வருகிறேன்; எனது செல்வாக்கு ஒன்றும் குறையவில்லை என்கிறார். எனக்கு எந்தவிதமான உணர்ச்சிக்கு இடம் இல்லாத மனத்தைப் பற்றி கவலை இல்லாத திராவிட மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவும் இல்லை. போலியாக நடித்துக் கொண்டு நான்கு பேர் நல்லவர் என்று சொல்லும் அளவுக்கு எனது வாழ்க்கை அமையவில்லை.
அண்ணாவும் கருணாநிதியும் முதன் முதலாக ஒரு மிலாது நபி பொதுக்கூட்டத்தில் சந்தித்துக்கொண்டனர். முஸ்லிம்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் இன்று மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால். பெரியார் இஸ்லாமியர்களின் அரசியலையும் ஆதரித்தார். இந்த விஷயத்தில் தான் பெரியார் காந்தியில் இருந்து வேறுபடுகிறார், காந்தி முஸ்லீம்களை ஆதரித்தார். ஆனால், அது அரசியல் ரீதியான ஒரு ஆதரவு அல்ல பெரியார் முஸ்லிம்களின் அரசியலையும் அவர்களின் சித்தார்த்தங்களையும் ஏற்றுக்கொண்டு ஆதரித்தார். திராவிட அரசியலில் முஸ்லிம்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. ஏனென்றால், திராவிட நாடு குறித்து பெரியார் பேச ஆரம்பிக்கும்போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதற்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று பெரியார் சொன்னார்.
இந்தியாவில் 25 விழுக்காடு முஸ்லிம்களுக்கு இந்த அரசில் உரிமை இருக்கிறதா, இல்லையா என்று பெரியார் அப்பவே கேள்வி கேட்டார். எனவே, மாணவர்களாகிய நீங்கள் இந்தச் செய்தியை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகையில், சமூகவியல் துறை சாா்பில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால் வெளிநபா்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றனா்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-and-islam-seminar-at-manonmaniyam-sundaranar-university-hindu-frontline-protest-361758/