புதன், 20 அக்டோபர், 2021

அசாம் முதல் தமிழகம் வரை… கடந்த ஆண்டு சொத்து வாங்கிய 12 மத்திய அமைச்சர்கள் யார், யார்?

 கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு முதல் 12 மாத கால இடைவெளியில், 12 மத்திய அமைச்சர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கியுள்ளனர். அசாம் முதல் தமிழ்நாடு வரை உள்ள அமைச்சர்கள், விவசாய மற்றும் விவசாயம் இல்லாத நிலம் மற்றும் டெல்லியில் ஒரு அபார்ட்மெண்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

78 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவில், 2020-21 நிதியாண்டில் சொத்து வாங்குவதாக அறிவித்தவர்களில் மூன்று பேர் கேபினட் அமைச்சர்கள். அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, மற்றும் கப்பல் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால். மேலும் ஒன்பது ராஜாங்க அமைச்சர்களும் சொத்து வாங்குவதாக அறிவித்துள்ளனர்

ஏப்ரல் 2020 முதல் 12 அமைச்சர்களால் மொத்தம் 21 சொத்துகள் வாங்கப்பட்டதாக PMO இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு விவசாய நிலங்கள். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஐந்து ராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் சொந்த மக்களவை தொகுதிகளில் சொத்து வாங்கியுள்ளனர்.

12 அமைச்சர்களைத் தவிர, கேபினட் அமைச்சர் கிரிராஜ் சிங்கும் அவரது மனைவியும் முந்தைய நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட அவர்களின் இரண்டு சொத்துக்களை, அறிவிக்கப்பட்டபோது குறிப்பிட்ட “சொத்தின் விலையில்” கிட்டத்தட்ட நான்கு மடங்கு மற்றும் ஆறு மடங்குக்கு மேலான விலையில், அந்த இரண்டு சொத்துக்களை இந்த காலகட்டத்தில் விற்றதாக தெரிவித்தனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது அறிவிப்பில், தெற்கு டெல்லியின் வசந்த் விஹாரில் 3,085.29 சதுர அடி இரண்டாம் மாடி குடியிருப்பை ரூ .3.87 கோடிக்கு வாங்கியதாக அறிவித்தார். இது, ஆகஸ்ட் 8, 2020 அன்று வாங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் அந்த சொத்தை “தனது” மற்றும் “தனது மனைவி” ஆகிய இரண்டு பேரின் கீழ் பட்டியலிட்டுள்ளார்.

ஸ்மிருதி இரானியின் அறிவிப்பில், 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி குடும்பத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற உத்திரபிரதேச மக்களவைத் தொகுதியான அமேதியில் சொத்து வாங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 19, 2021 அன்று மெடான் மாவாய் கிராமத்தில் இரானி 0.1340 ஹெக்டேர் நிலப்பரப்பை “அப்போதைய மதிப்பான” ரூ .12.11 லட்சத்தில் வாங்கியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், அசாம் முதல்வராக இருந்தபோது, ​​திப்ருகரில் மூன்று சொத்துக்களை வாங்கியதாக சோனோவால் அறிவித்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அசாமில் பிஜேபி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டு சோனோவாலுக்குப் பதிலாக ஹேமந்தா பிஸ்வா சர்மாவை முதல்வராக நியமித்தது. ஜூலை 7, 2021 அன்று, சோனோவால் மத்திய அமைச்சரவையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சராக இடம் பெற்றார்.

சோனோவாலின் அறிவிப்பில், அவர் மாங்கோட்டா கானிகர் மௌசாவில் மூன்று நிலங்களை 6.75 லட்சம் (பிப்ரவரி 1), 14.40 லட்சம் (பிப்ரவரி 23) மற்றும் 3.60 லட்சத்திற்கு (பிப்ரவரி 25) வாங்கியுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கின் அறிவிப்பில், அவர் பாட்னாவில் சிவம் அபார்ட்மெண்டில் உள்ள தனது 650 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டை பிப்ரவரி 2, 2021 அன்று ரூ. 25 லட்சத்திற்கு விற்றதாகக் காட்டுகிறார். இந்த சொத்தை அவர் கடந்த ஆண்டு அறிவிப்பில் “தோராயமாக” ரூ.6.5 லட்சம் என குறிப்பிட்டிருந்தார்.

கிரிராஜ் சிங்கின் மனைவி உமா சின்ஹா, ஜார்க்கண்டின் தியோகரில் உள்ள 1,087 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வீட்டை ரூ .45 லட்சத்திற்கு விற்றார். கடந்த ஆண்டு கிரிராஜ் சிங்கின் அறிவிப்பில், அந்த “சொத்தின் விலை” “தோராயமாக” ரூ .7 லட்சம் என காட்டப்பட்டது.

2013-14 முதல் மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகள் தற்போது பிஎம்ஓ இணையதளத்தில் இருக்கிறது. 2020-21ல் 45 ராஜாங்க அமைச்சர்களில் 9 பேர் சொத்து வாங்குவதாக அறிவித்தனர்.

* ஸ்ரீபாத் யேசோ நாயக்; துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை; அவரது தொகுதியான வடக்கு கோவாவில் மூன்று சொத்துகள் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அதில், இரண்டு விவசாயம் இல்லாத நிலம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் அடங்கும். விவசாய அல்லாத நிலங்களான 1286.29 சதுர அடி (ரூ. 7.23 லட்சம்) மற்றும் 188.37 சதுர அடி (ரூ 1.08 லட்சம்) ஆகியவை பனெலிம் (செயின்ட் பெட்ரோ) இல் பகுதியில் நவம்பர் 27, 2020 அன்று வாங்கப்பட்டன. 968.75 சதுர அடி (ரூ. 40.95 லட்சம்) உள்ள குடியிருப்பு கட்டிடம் டௌஜிமில் டிசம்பர் 8, 2020 அன்று வாங்கப்பட்டது.

* கிரிஷன் பால் குர்ஜார்; மின்சாரத்துறை: ஹரியானாவில் உள்ள அவரது மக்களவைத் தொகுதியான ஃபரிதாபாத்தில் கூட்டு உடைமை மூலம் மூன்று விவசாய நிலங்கள் வாங்கியுள்ளார். அக்டோபர் 10, 2020 அன்று பூபானியில் 1.47 கோடி ரூபாய்க்கு; அக்டோபர் 31, 2020 அன்று பூபானியில் ரூ .1.95 கோடிக்கு; மற்றும் ரூ . கேரியில் பிப்ரவரி 24, 2021 அன்று 4.21 கோடிக்கு.

* சாத்வி நிரஞ்சன் ஜோதி; நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்: கான்பூரில் உள்ள கிருபல்பூரில் ஜூலை 8, 2020 அன்று 1.214 ஹெக்டேர் நிலம் ரூ .36.42 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

2020-21-ல் சொத்து வாங்கிய ஒன்பது ராஜாங்க அமைச்சர்களில் ஆறு பேர் இந்த ஆண்டு ஜூலை 7-ல் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில் அமைச்சர்கள் குழுவில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்கள் வாங்கிய சொத்து விவரங்கள்…

* பானு பிரதாப் சிங் வர்மா; சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்: ஜான்சியிலுள்ள பெட்வா விஹார் பகுதியில் 2021 ல் 20 லட்சம் ரூபாய்க்கு குடியிருப்பு இடம்.

* அன்னபூர்ணா தேவி; கல்வித்துறை: ஜார்க்கண்டில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான கோடெர்மாவில் ரூ. 3.12 லட்சம் மதிப்புள்ள நிலம், மற்றும் ராஞ்சியில் ரூ. 9.75 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆகிய இரண்டு நிலங்களை அவரது மகன் வாங்கியதாக அறிவித்தார்.

* பி.எல்.வர்மா; வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி: ஜூன் 1, 2020 அன்று கூட்டு உடைமையில் ரூ. 52 லட்சத்திற்கு 3,126.92 சதுர அடி நிலப்பரப்பு மற்றும் அக்டோபர் 7, 2020 -ல் லக்னோவில் உள்ள மானஸ் என்க்ளேவ் சொசைட்டியில் ரூ .70 லட்சத்திற்கு 3,510 சதுர அடி நிலம்.

ஜூலை 30, 2020 அன்று உத்திரபிரதேசத்தின் பதாவுனில் உள்ள புட்லா கஞ்சனில் தனது மனைவியால் வாங்கப்பட்ட விவசாய நிலத்தையும் பி.எல்.வர்மா அறிவித்துள்ளார். தற்செயலாக, நடப்பு நிதியாண்டில், அதே இடத்தில் தனது மனைவியால் இன்னொரு நிலம் வாங்கப்பட்டதை ஜூன் 25, 2021 அன்று அவர் பட்டியலிட்டுள்ளார். பி.எல்.வர்மா இரண்டு நிலம் வாங்குதல்களின் ஒருங்கிணைந்த செலவை ஏறக்குறைய ரூ .8 லட்சம் என்று பட்டியலிட்டுள்ளார்.

* தேவுசின் சவுகான்; தகவல்தொடர்புகள்: குஜராத்தில் உள்ள அவரது மக்களவைத் தொகுதியான கெடாவில் உள்ள நாடியத்தில் 5.79 ஏக்கர் விவசாய நிலம், அவரது மனைவியின் பெயரில் ஏப்ரல் 1, 2020 அன்று ரூ. 30.43 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.

* டாக்டர் மகேந்திர முன்ஜ்பரா; பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு: குஜராத்தில் தனது மக்களவைத் தொகுதியான சுரேந்திரநகரின் சைலாவில் ஜூன் 28, 2020 அன்று ரூ. 42,500 க்கு விவசாய நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

* டாக்டர் எல் முருகன்; மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளர்ப்பு: ஜூலை 2, 2020 அன்று தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் இல்லாத நிலத்தை அவரது மனைவி ரூ .5.73 லட்சத்திற்கு வாங்கியதாக அறிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/from-assam-to-tamil-nadu-12-union-ministers-bought-property-last-fiscal-357286/