வியாழன், 21 அக்டோபர், 2021

பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் மின்சார துறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூற, அதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் கூற அண்ணாமலையும் ஆதாரத்தை வெளியிட்டுவிட்டார். அண்ணாமலையின் ஆதாரத்துக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்க சமூக ஊடக எக்ஸல் சீட்டு அண்ணாமலை என்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 20ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கடந்த அதிமுக ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம் தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உடனடியாக, அண்ணாமலையின் புகாருக்கு பதிலளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார துறையில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை அண்ணாமலை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு கெடு அளித்தார்.

தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார் என்று செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.

தமிழக பாஜக தலைவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரம் கெடு அளித்த நிலையில் அண்ணாமலை 2 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டார்.

அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்: “தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ. 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. இதற்கு பதில் கூறுங்கள் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு கேட்டுள்ளார். மேலும், அதனுடன், “தற்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்?அவரது சென்னை வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ‘ஆலோசகர்களுக்கு’ இந்த 4% கமிஷன் எங்கே சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது தெரியும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஒரு எக்ஸல் சீட்டில் உள்ள கணக்குகளையும் இணைந்த்திருந்தார்.

மேலும், இந்த வாரம் – அனல் அடுத்த வாரம் – சூரிய ஒளி மின்சார அதற்கு அடுத்த வாரம் – தயாராகிக் கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கிவிட்டார் என்று பாஜக ஆதரவாளர்கள் எல்லோரும் சமூக ஊடகங்களில் பதிவிட, அண்ணாமலையின் ஆதாரம் குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து, சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்கள் எக்ஸல் சீட்டு அண்னாமலை என்று பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையின் ஆதாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு. அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ.15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில், நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை.” என்று தொடர் ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

செந்தில் பாலாஜி மற்றொரு தொடர் ட்வீட்டில் அண்ணாமலைக்கு மேலும் சில விவரங்களையும் குறிப்பிட்டு சுட்டிக் காட்டியுள்ளார். அதில், “செப் 24 – அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக் 18 அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ. குஜராத் வாங்கியது 45 மி.யூ, மஹாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ. ஹரியானா வாங்கியது 14 மி.யூ. இந்திய மின் சந்தையில் அக் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-annamalai-release-proof-for-corruption-in-eb-minister-v-senthil-balaji-retaliated-to-him-358260/