செவ்வாய், 26 அக்டோபர், 2021

பயண கட்டுப்பாட்டை நிபந்தனையுடன் நீக்கிய சிங்கப்பூர்

 இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படுவதாகச் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வு வருகிற 27-ந்தேதி முதல் நடைமுறைக்‌கு வருகிறது. எனினும் மேற்கூறிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் Category IV border கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Category IV border கட்டுபாடுகள் என்ன?

இந்த வகையின் கீழ், வெளிநாட்டுப் பயணிகள் நான்கு விதமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதன்படி, சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் இறப்பு மற்றும் மெடிக்கல் எமர்ஜென்சியில் வரும் பயணிகள் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்கள் யாரும் உடனடியாக அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டி-பிசிஆர் கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதே போல, சிங்கப்பூர் வந்தவுடன் மற்றொரு சோதனை செய்திட வேண்டும். இதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் 10 நாள்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்திட வேண்டும்.

ஏன் இந்த திடீர் தளர்வுகள்?

சிங்கப்பூர் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முன்னதாக வங்க தேசம், இந்தியா, மியான்மர், நேபாள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் 14 நாள் பயண வரலாற்றைக் கொண்ட நபர்கள் சிங்கப்பூர் வர அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மற்ற நாடுகளின் கொரோனா பாதிப்பை ஆராய்ந்து, கட்டுப்பாட்டில் தளர்வுகளை அறிவித்துள்ளோம். அதன்படி, மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அக்டோபர் 27 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். ஆனால், அனைத்து பயணிகளும் category 4 border கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்த நாட்டுப் பயணிகள் சிங்கப்பூர் வரலாம்

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் நாடுகளிலிருந்து, சிங்கப்பூர் வர சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவிலிருந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தால், சிங்கப்பூர் செல்ல விரும்புவோர் மற்றொரு நாட்டில் 14 நாள்கள் இருக்கவேண்டிய நிலை இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில், ஜெர்மனி மற்றும் புருனே தாருஸ்ஸலாமிலிருந்து தடுப்பூசி செலுத்தியவர்கள் சிங்கப்பூர் வருவதற்காக VTL என்கிற பிரத்தியேக தளம் உருவாக்கப்பட்டது. பின்னர், VTL பட்டியலில், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து எந்த நாடுகளுக்கு செல்லலாம்?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், மாலத்தீவு, துருக்கி, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் தற்போது இந்தியப் பயணிகளுக்கு அனுமதி உள்ளது.

கடந்த மாதம், டெல்லியில் உள்ள துருக்கிய தூதரகம், இந்தியாவிலிருந்து துருக்கிக்கு செல்லும் பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தது.

ஆகஸ்டில் ஜெர்மனி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது. அதன் மூலம், இந்தியர்கள் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாடும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகள் வரலாம் எனத் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/singapores-conditional-lifting-of-travel-restrictions-for-indians-360068/