ஞாயிறு, 31 அக்டோபர், 2021

திமுக- பாமக திடீர் கூட்டணி: நெமிலியில் அதிமுக ஷாக்

 30 10 2021 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியை, பாமகவுடன் கூட்டணி அமைத்து, திமுக முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதில் பாமக துணைத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த, மறைமுகத் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பாண்மைக்கான உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. இதில், பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இடையில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதற்கிடையில், கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் ‘தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் பொதுப்பிரிவு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே நெமிலி ஒன்றியத் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

புதிய அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் என்ற கவுன்சிலர் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில், ‘நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், ‘நெமிலி ஒன்றிய மறைமுகத் தேர்தலை நிறுத்தி வைக்கவும் ஒரு வாரத்துக்கு முன்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதன்படி, கடந்த 22ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுகத் தேர்தல் நிறுத்தப்பட்டதுடன் தலைவர் பதவியைப் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்து அக்டோபர் 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நெமிலி ஒன்றியத்துக்கான மறைமுகத் தேர்தல், காவல் துறையினர் பாதுகாப்புடன் இன்று (அக்டோபர்30) நடைபெற்றது. இன்று காலை தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களைத் தவிர்த்து மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 15 பேரும் கலந்துக் கொண்டனர். தலைவர் பதவிக்குத் திமுக சார்பில் வடிவேல் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல், பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாமகவைச் சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் மனுத்தாக்கல் செய்தார். எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

நெமிலி ஒன்றியத்தில் பாமகவுக்குத் தலைவர் பதவியை அளித்து அதிமுகவுக்குத் துணைத் தலைவர் பதவியைப் பெறலாம் என்ற அதிமுகவின் முயற்சி கடைசிவரை வெற்றி பெறவில்லை. அதேநேரம், துணைத் தலைவர் பதவியைக் கொடுத்து பாமகவுடன் கூட்டணி அமைத்த திமுக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதுவரை நெமிலி ஒன்றியத்தை அதிமுக, பாமக மட்டுமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-wins-ranipet-nemili-panchayat-union-chairman-elections-362518/