வியாழன், 21 அக்டோபர், 2021

உங்க ஊரிலேயே முகாம்; பட்டா பிரச்னைக்கு உடனடி தீர்வு: தமிழக அரசு அறிவிப்பு

 வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சட்டப்பேரவையில், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்’ என அறிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெந்த் வெளியிட்டுள்ளார்.

புதன், வெள்ளியில் சிறப்பு முகாம்

அதில் “சிறப்பு முகாம்களை வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தி மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வருவாய், நில அளவைத் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

சிறிய தவறுக்கு உடனடி தீர்வு

சிறிய அளவிலான தவறுகள் இருப்பின் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, சர்வேஎண் அல்லது உட்பிரிவு எண், நிலஅளவு, பட்டாதாரர், அவரது தந்தைஅல்லது காப்பாளர் பெயர், உறவுமுறை குழப்பம், நில உரிமையாளர் பெயர், நிலம் அமைந்துள்ள இடத்தின் பெயரில் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மாற்றலாம். அ பதிவேடு அல்லது நில உரிமையாளர் அளிக்கும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து, சிறு தவறுகளை அந்த நாளே நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்குள் தீர்வு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காண உறுதிசெய்ய வேண்டும்.

சிறப்பு முகாம்களில், சமூக இடைவெளி, முகக்கவசம் கண்டிப்பாக அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகனை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் தொடர்பான பணிகளை மாநில அளவில் நில நிர்வாக கமிஷனர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் ஆய்வு செய்வார்கள். சிறப்பு முகாம்கள் திட்டத்தை பொதுமக்கள், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாகவும், வெற்றிக்கரமானதாகவும் மாற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-conduct-special-camps-for-patta-plans-357965/