பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிஜிபி மீது புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் நிறுத்த முயன்றதாக ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் கூறினார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், உங்கள் உயர் அதிகாரி சொன்னால் கொலையும் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டி பெண் ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் டி.கண்ணன் தாக்கல் செய்த மனுவைத் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், “காவல் துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. பெண் ஐபிஎஸ் அதிகாரி சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்க சென்றபோது செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தனது காரை தடுத்து நிறுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் கண்ணன் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
எஸ்.பி கண்ணன், அவருடைய உயர் அதிகாரியாக இருந்த ராஜேஷ் தாஸின் அறிவுறுத்தலின்படி, ‘டிஜிபி மீது புகார் அளிக்க முன்வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை நிறுத்த முயன்றதாக கண்ணன் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், உயர் அதிகாரி அறிவுறுத்தினால் யாரையாவது கொலை செய்யச் சொன்னால் கொலையும் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
உயர் அதிகாரியின் சட்டபூர்வமான அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதி, “ஒரு மூத்த அதிகாரி இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டால், மக்கள் எப்படி காவல் துறை மீது நம்பிக்கை வைப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
10% காவல்துறை அதிகாரிகள் மட்டுமே தங்கள் மனசாட்சிப்படி செயல்படுகிறார்கள் என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இதுபோன்ற சம்பவங்கள் இந்த காவல் துறைக்கே அவமானம் என்று கூறியது.
முன்னதாக, மனுதாரரின் வழக்கறிஞர், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் அதிரடியாகவும் அலட்சியமாகவும் இயக்கப்பட்டதால் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது என்று கூறினார். மேலும், டிஜிபியின் அறிவுறுத்தலின்படி கண்ணன் தனது தொலைபேசியை மட்டுமே அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் கொடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் விரும்பவில்லை என்பதால், மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/woman-ips-officer-sexual-harassment-case-hc-asks-question-sp-would-murder-if-superior-instructs-358198/