மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மரணத்தின்போது இறுதி நிகழ்வை ஒருங்கிணைத்த அமுதா ஐ.ஏ.எஸ் மத்தி அரசுப் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்புவதால் அவருக்கு தமிழக அரசில் முக்கிய பணி வழங்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, அவருடைய பணிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்புகிறார். இது தமிழக அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல தமிழக மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
யார் இந்த அமுதா ஐஏஎஸ்?
தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் அமுதா ஐஏஎஸ். மதுரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெரியசாமி ஒரு மத்திய அரசு ஊழியர். அமுதாவின் தாத்தா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. இவருடைய சகோதரர் குமரன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி.
மதுரை கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த அமுதா, மதுரை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.எஸ்ஸி முடித்தார்.
ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அமுதா தேர்ச்சி பெற்றாலும் முதலில் அவருக்கு ஐபிஎஸ் தான் கிடைத்தது. ஆனாலும், மீண்டும் தேர்வெழுதிய அமுதா, 1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடத்திலும், இந்திய அளவில் பெண்களில் முதலாவதாகவும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். அமுதாவின் கணவர் ஷம்பு கல்லோலிகர் ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளராக உள்ளார்.
கடலூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய ஐ.ஏ.எஸ், அங்கிருந்து, யூனிசெஃப் தேசிய திட்ட அதிகாரி, தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் ஆணையத்தின் ஆணையர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை பெருவெள்ள பாதிப்புகளைச் சீர்செய்யும் சிறப்பு அதிகாரி, உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியர், பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் என்று பல்வேறு துறைகளிலும் திறம்பட சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் மணல் கொள்ளையைத் தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட அமுதா, ஒரு மணல் கொள்ளை கும்பலைத் தடுக்க முயன்றபோது மணல் லாரி இடித்ததில் படுகாயமடைந்தார். மிரட்டல்களூக்கும் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத அமுதா ஐ.ஏ.எஸ் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பல நூறு லாரிகளை துணிச்சலாக பறிமுதல் செய்து மணல் கொள்ளையை கட்டுப்படுத்தினார்.
தமிழக அரசியலில் இருபெரும் துருவ தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களின் ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டு பாராட்டைப் பெற்றார்.
அமுதா ஐ.ஏ.எஸ் தருமபுரி ஆட்சியராக இருந்தபோது, மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்தார்.
2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, அமுதா ஐ.ஏ.எஸ் வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அப்புறப்படுத்தினார். அமுதா ஐ.ஏ.எஸ் தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களின் பாரட்டுதல்களைப் பெற்றார்.
மக்களின் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கு பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின்போது, இறுதிச் சடங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு அமுதாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது, ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து ஸ்டாலினிடம் நற்பெயரைப் பெற்றார்.
அதன் பிறகு, தமிழகத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கே அமுதாவின் பணியைக் கண்ட உயரதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றப் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, அமுதா ஐ.ஏ.எஸ் கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியில் சேர்ந்தார். மத்திய அரசு பணியில் இருந்து வரும் அமுதா ஐ.ஏ.எஸ்-ஸின் பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில், பிரதமர் அலுவலகம் அவரைப் பணியிலிருந்து விடுவித்திருக்கிறது. அமுதா ஐ.ஏ.எஸ் மீண்டும் தமிழகம் திரும்புகிறார். சொந்த மாநிலம் திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு தமிழக அரசு மிக முக்கியப் பொறுப்பை வழங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/amudha-ias-return-to-tamilnadu-service-what-is-plan-of-cm-mk-stalin-357210/