தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாதம் ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர் என சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த முறை அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திமுக அரசு ஆட்சி பொறுப்பெற்ற 3 மாதங்களிலேயே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அடுத்த ரெய்ட் யாருக்கு என்று பொது மக்களும் தமிழக அரசியல் களமும் எதிர்பார்த்திருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு இவர்தான் என்று காட்டியிருக்கிறார்கள்.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவருக்கு சொந்தமான இடங்கள் என சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (அக்டோபர் 18) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையிலும், சட்ட மன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆரில், தி.நகர் பங்களா, காஞ்சிபுரம் விவசாய பண்ணை, 14 கல்வி நிறுவனங்கள் என அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், விஜயபாஸ்கர் ஏப்ரல், 2016 முதல் மார்ச், 2021 வரை பதவியில் இருந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அவர் அவரது மனைவி பெயரில் சுமார் ரூ.27,22,56,736 கோடி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று வாங்கியுள்ளார். ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். ரூ.28 கோடிக்கு பல நிறுவனங்களில் முதலீடு செய்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியுள்ளார்.
சென்னை தி.நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். தனது சொந்த ஊரில் உள்ள வேலைகளுக்கு ரூ.6.6 கோடிக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி ஆகியவற்றை வாங்கியுள்ளார். வருமான வரித்துறை கணக்கின்படி, கடந்த 5 ஆண்டில் விஜயபாஸ்கரின் வருமானம் ரூ.58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் 5 ஆண்டுகளில் செய்த செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். ஆனால், அவர்கள் வருமானத்தை மீறி ரூ.27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விஜயபாஸ்கர் தனது மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், இந்த சந்தேகத்திற்கிடமான பணத்தின் மூலம் அன்னை தெரசா பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அந்த அறக்கட்டளை மூலம் சுமார் 14 கல்வி நிறுவனங்களையும் அவர் நடத்தி வந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த சோதனையில், தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ள 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4.87 கிலோ தங்கம், 23 லட்ச ரூபாய் பணம், சொத்து பரிவர்த்தனை தொடர்புள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனைகள் குறித்து அதிமுக தலைமை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை தலைமை ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கழக அமைப்புச்செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத்தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.
அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில் நேற்று தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம், இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிவிடவோ முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை.
எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும் அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளுக்கு இடையே அக்டோபர் 18ம் தேதி மாலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எல்லாருக்கும் என்னைப் பற்றித் தெரியும். நான் கடுமையான உழைப்பாளி. நான் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் குடிமகன். என் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், என் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. ஊடகங்கள் சரியாக செய்திகள் வெளியிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நான் அமைச்சராக இருந்தபோது மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் தொடங்கியதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், 1998-ம் ஆண்டே அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2003-ம் ஆண்டே கல்வி நிறுவனங்களைத் தொடங்கிவிட்டோம். 18 ஆண்டுகளாக செயல்படுகிறது. அவை ஏதோ இப்போது தொடங்கியதுபோல செய்திகள் வெளிவருகின்றன. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தற்போது சோதனை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இப்போது முழுவதுமாக பேசமுடியாது. நாளைக்கு செய்தியாளர்களிடம் தெளிவாக பேசுகிறேன்.
பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதிமுகவுக்கு சோதனை என்பது புதிதல்ல. பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடவேண்டும். சோதனை செய்பவர்களிடமும், சோதனைக்கு உட்படுத்தப்படும் என்னிடம் தகவல்களைப் பெற்று ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும். பொதுவாழ்க்கையில் இருக்கும் நாங்கள் இதுபோன்ற வழக்குகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். கணக்கில் காட்டப்படாத பணம், நகை எதுவும் என்னிடம் கிடையாது. என் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dvac-raids-at-places-belonging-to-former-health-minister-vijayabaskar-and-fir-registered-357232/