கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வுப் பிரிவு-6, மார்ச் 2015 தொடங்கி சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆய்வு நடத்திவருகிறது. இங்கே பல அணிகலன்கள், பாணை ஓடுகள், கிணறு, பழங்கால சாயப்பட்டறை உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2,200 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அண்மையில், கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி முடிவடைந்தது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பார்வையிடவும் துரிதப்படுத்தவும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார். மேலும், அங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கான வைப்பகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழர்களின் தாய்மடியாம் கீழடிக்கு இரண்டாம் முறை சென்றேன். இம்முறை வியப்பு மேலும் கூடியது! அன்னைத் தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துரைக்கும் அகழ்வுப்பணியை திமுக அரசு ஆழப்படுத்தும் தரணியெங்கும் தமிழரின் வரலாற்றுத் தொன்மையைக் கொண்டு சேர்ப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அதே பகுதியில் அகழாய்வு நடக்கும் மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் அங்கிருந்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-visits-keezhadi-excavation-sites-362093/