ஞாயிறு, 31 அக்டோபர், 2021

நீட் பீதியில் மேலும் ஒரு மாணவர் மரணம்; ஸ்டாலின் இதைச் செய்து ஆகணும்: அன்புமணி

 30 10 2021 நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ், கனிமொழி, மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர் கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த தேர்விலும் கலந்து கொண்டு தேர்வு எழுதி இருக்கிறார்.

தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த கீர்த்திவாசனுக்கு தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனஉளைச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில் 2வது ரேங்க் வாங்குவார் என்றும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்றிருந்த நிலையில் திடீரென்று மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்தார், இதனால் மன உளைச்சலடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, கடந்த 3 வருடங்களாக வேறு எந்த கல்லூரிக்கும் செல்லாமல், நீட் தேர்வுக்கு மட்டுமே அவர் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது மாணவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் மாணவரின் மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் தங்கள் கருத்துகளை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு முக்கிய கோரிக்கையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு விடுத்துள்ளார். அதில் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும், இதற்காக தனிக்குழு அமைத்து ஆளுநர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 4 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டுகள் பின்வருமாறு:-

  1. பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்!
  2. மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும்!
  3. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுனரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுனர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்!
  4. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.