ஞாயிறு, 31 அக்டோபர், 2021

உங்கள் ஊருக்கான சார் பதிவாளர் அலுவலகம் மாறும் வாய்ப்பு: தமிழக அரசு புதிய அரசாணை

 30 10 2021 தமிழகத்தில் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்களை ஒரே எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், சார்பதிவாளர் அலுவலக எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது, பதிவுத்துறையில் சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அதே வருவாய் கிராமத்திற்குட்பட்ட குக்கிராமம் வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை-வருவாய்த்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.

எனவே, ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முக்கிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட குக்கிராமங்கள் அனைத்தும் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் பதிவு எல்லைகளை சீரமைத்து நிர்வாக அனுமதி வழங்க ஏதுவாக பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிடுகிறது.

பதிவுத்துறையில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் அமைந்துள்ள முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றில் அமைந்துள்ள குக்கிராமங்களின் விவரங்கள் அந்தந்த பதிவு மாவட்டத்தில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளரால் தொகுக்கப்பட வேண்டும். இந்த விவரங்கள் வருவாய்த்துறையில் உள்ள கிராமங்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

இந்த கிராமங்களில் வேறு, வேறு சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் முக்கிய வருவாய் கிராமங்கள் மற்றும் அவற்றின் குக்கிராமங்கள் கண்டறியப்பட வேண்டும் பிரதான வருவாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை ஒன்றிணைத்து அவற்றை முக்கிய வருவாய் கிராமம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கலாம் அல்லது அந்த குக்கிராமங்கள் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்கப்படலாம். அவ்வாறு இணைக்கும் போது பதிவு கிராம எல்லைகள் வருவாய்த்துறையின் வருவாய் கிராமம், வருவாய் வட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் ஆகியவற்றுடன் பொருத்தும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் சீரமைக்கப்படும் போது ஒரு வருவாய் கிராமம் முழுவதையும், ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவாளர் எல்லைகள் சீரமைக்கப்பட வேண்டும்.

வருவாய் மாவட்டங்களுடன் பொருந்தும் வகையில் ஒரே குக்கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களும் ஒரே சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இணையவழி தானியங்கி பட்டாமாறுதல் பணியை இலகுவான வகையில் மேற்கொள்ள ஏதுவாக பதிவு கிராமங்கள் அனைத்தும் வருவாய் கிராமங்களுடன் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.பின்னர் இவ்விவரங்கள் தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

குக்கிராமங்கள் இணைக்கப்படவுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பின் கீழ் இதுகுறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

பின்னர் குக்கிராமங்கள் உரிய சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இதுகுறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு்ளளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-permission-to-village-register-office-redefine-362451/