புதன், 27 அக்டோபர், 2021

மின்வாரிய ஊழல் புகார்: ரூ500 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

 கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக மின்சார வாரியம் பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். மேலும், தி.மு.க-வைச் சேர்ந்த தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலை கூறும் ஆதாரங்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

இதன் பிறகு, திருட்டைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் மிகப் பெரிய ஆதாரமான அந்த எக்ஸெல் ஷீட்டை தான் பகிர்ந்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அண்ணாமலை பதிலளித்தார். மேலும், செந்தில் பாலாஜி இன்னும் மூன்று மாதங்கள் கழித்து பதவியில் இருந்தால் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையைக் குறித்துப் பேசத் தொடங்கப்படும் என்றும் எச்சரக்கைவிடுத்தார் அண்ணாமலை.

இந்நிலையில்தான், பி.ஜி.ஆர் நிறுவனம் குறித்து சரியான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தவறான கருத்துத் தெரிவித்ததற்காக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்நிறுவனம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து, ட்விட்டரில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தான் ஒரு சாதாரண விவசாயி என்றும் தன்னிடம் சில ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் தி.மு.க. அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

மேலும், நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pgr-energy-notice-to-bjp-president-annamalai-seeking-compensation-of-rs500-crores-tamil-news-360845/