ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த கேரள அமைச்சர்கள்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

 30 10 2021  தமிழக அரசின் பராமரிப்பில், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடி ஆக இருக்க வேண்டும் என 2006 மற்றும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள், கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மாவட்டங்கள் கனமழையை சந்தித்து வருகின்றன. இதில் இரு மாநிலங்களில் உள்ள அணைகளும் கணிசமான நீர் வரத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அணை உடைந்து விடும் என்ற தொடர் அச்சம் கேரள மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள் நேற்று காலை 7:29 மணிக்கு அணை திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்து இருந்தது. நீர் திறப்பின் போது கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் இருந்தனர்.

தமிழக அரசு சார்பில், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். நீர் திறப்பிற்குப் பின் அமைச்சர்கள், தண்ணீர் வெளியேறும் வல்லக்கடவு, மஞ்சுமலை, வண்டிப்பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர்.

பெரியாறு அணை அருகே உள்ள மூன்று மற்றும் நான்காவது மதகுகளில் வினாடிக்கு தலா 257 கன அடி வீதம், 514 கன அடி நீர், கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு செல்லும். அணை திறப்பிற்கு பிறகு பேசிய கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின், ”பெரியாறு அணையில் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு 514 கன அடி நீர் வெளியேறுவதால் கேரள மக்கள் கவலைப்படத் தேவையில்லை.”அணை நிலவரம் குறித்து, அடிக்கடி தெரிவிக்கும் வகையில் இரு மாநில அதிகாரிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் உத்தரவின்றி, முல்லைப் பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுத்து அணையை திறந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கேரள அரசின் இந்த செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இது எழுப்பப்பட்டது. அப்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ”தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே விடுத்தது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் விதிமீறலை கட்டுப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

பின்னர் சங்க நிர்வாகிகளுடன் வெளிநடப்பு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பெரியாறு அணையில் நவம்பர் 11 வரை, 139.50 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், முன்கூட்டியே அணையில் இருந்து கேரளாவுக்கு 514 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்னும் அணை நீர் கிடைக்காத நிலையில், இதை ஏற்க முடியாது.

கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு, கேரள அரசை கலைக்க வேண்டும். தமிழகத்துக்கு 999 ஆண்டு ஒப்பந்தம் இருந்தாலும் 90 சதவீத அணை உரிமை, கேரளாவிடம் பறிபோயுள்ளது. இன்றைய நாள், ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு கறுப்பு நாள். கேரள அரசை கண்டித்து, இன்று முதல் போராட்டம் நடத்த உள்ளோம்.” என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-dam-tamil-news-kerala-ministers-releases-water-from-mullaperiyar-dam-farmers-in-tn-object-362243/