சேலம் மாவட்ட காவல்துறையினரால் பெறப்பட்ட லஞ்சத்தின் விவரங்களைக் குறிப்பிட்டு அவர்களை எச்சரித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) எம்.ஸ்ரீ அபினவ் இந்த சுற்றறிக்கையை மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு (ஏடிஎஸ்பி) அனுப்பியுள்ளார்.
கஞ்சா விற்பனையாளர்கள், லாட்டரி சீட்டு மற்றும் மது விற்பனையாளர்கள் போன்ற சமூக விரோதிகளிடமிருந்து சட்டவிரோதமாக சில காவல் துறையினர் லஞ்சம் பெற்றதாக தெரிந்துக் கொண்ட எஸ்.பி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும் மனு கொடுப்பவர்களிடமும் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் எஸ்.பி குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலைய எழுத்தாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் பெற்ற லஞ்சத் தொகை விவரங்களை குறிப்பிட்டு எஸ்.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தவறு செய்யும் காவலர்களை எச்சரித்ததுடன், ஏஎஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்களுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்யவும் எஸ்.பி உத்தரவிட்டார். இருப்பினும், இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக காவல் துறையில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எந்த எந்த சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து சுற்றரிக்கை அனுப்பிய சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்! ஊழலை ஒழிக்கப் போராடும் அவர்களுக்கு பாராட்டுக்கள்.வெளிப்படையான முயற்சிக்கும் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார். மேலும், அதே சமயத்தில் உள்துறையை நிர்வகித்து வரும் தமிழக முதல்வர் இதுகுறித்து என்ன பதில் சொல்வார்? திமுக ஆட்சி பொற்றுப்பேற்ற உடன் தமிழக காவல் துறையில் ஊழல் மலிந்து விட்டதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.