தமிழக அரசியலில் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் மக்களவைத் தேர்தலின்போதும் 3வது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழும். சில தேர்தல்களில் 3வது அணி அல்லது 3வது சக்தி உருவாக்கப்பட்டு போட்டியிட்டாலும் பெரிய வெற்றி பெற்றதில்லை.
தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் இரண்டு கட்சிகளின் ஆதிக்கம்தான் இருந்து வந்துள்ளது. 3வது அரசியல் சக்தி என்பது பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தவில்லை.
சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, ஆந்திரா மாநிலங்கள் பிரிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் காங்கிரஸ் – திமுக என்ற இரண்டு கட்சிகளே செல்வாக்கு மிக்கவைகளாக தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுக தொடங்கிய பிறகு, அதற்கு பின் வந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சரானார். அதன் பிறகு, தமிழக அரசியல் அதிமுக – திமுக என்ற இரு துருவ அரசியலாகவே இருந்து வருகிறது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாக தோல்வியடைந்தாலும் மக்களிடம் இந்த இரு கட்சிகளே அதிகம் செல்வாக்கு மிக்கவைகளாக இருந்து வந்துள்ளன.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக – திமுக ஆகிய 2 எதிர் கூட்டணிகளுக்கு மாற்றாக 3வது அனியாக சொல்லப்பட்ட மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் பின்னாளில், மக்களிடையே 3வது அணிக்கு வரவேற்பு இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் பெரும்பாலும் திமுக கூட்டணியிலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியிலும் இணைந்தன.
அதே நேரத்தில், தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக சொல்லிக்கொண்டு வந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.
2019ம் மக்களவைத் தேர்தலில் கனிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறைந்தது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று தனித்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து வந்தாலும் இதுவரை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதே போல, இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்த பாமக 2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் – முன்னேற்றம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்வைத்து தேர்தலை சந்தித்தது. 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாமகவால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
இதையடுத்து, வந்த தேர்தலில் பாமக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகிறது. இப்படி தமிழக அரசியலில் 3வது சக்திக்கு தமிழக மக்கள் பெரிய வரவேற்பை அளிக்கவில்லை என்பதே இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவீதம் வாக்குகளைப் பெற்று கவனிக்க வைத்தது. அதே போல, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட குறைவாக பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தார். இப்படி, அதிமுக – திமுகவுக்கு மாற்றாக 3வது அரசியல் சக்தி என்பது தமிழக அரசியலில் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதே யதார்த்தம்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், வழக்கம் போல, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாமக ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிட்டன.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல் தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாகவே உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் கிராம சபாக்களின் வலிமையையும் மக்கள் மத்தியில் பரப்பினார். ஆனால், மக்கள் நீதி மய்யம் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
அதே போல, நாம் தமிழர் கட்சி ஒரு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனித்து தேர்தலை சந்தித்தது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. 1000க்கு மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் பாமக சுமார் 47 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரிகிறது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை காட்டுகின்றனர். அதே நேரத்தில், தமிழக அரசியலில் 3வது சக்திகளாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மநீம, பாமக ஆகியவற்றை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் கூட இந்த கட்சிகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.
புதன்கிழமை மாலை 4 மணியளவில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திமுக தலைமையிலான கூட்டணி 140 இடங்களில் 138 மாவட்ட வார்டு கவுன்சிலர் இடங்களை வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு இரண்டே இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேபோல், மொத்தம் மொத்தம் 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 1,020 இடங்களையும், அதிமுக 211 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ஒன்பது மாவட்டங்களில் 92 இடங்களை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
மூன்றாவது அரசியல் சக்தி என்பதைப் பொறுத்தவரை, அதற்காக ஆசைப்படும் கட்சி தனது தொண்டர்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பாமக தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களைக்கூட ஈர்க்க முடியவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்த கட்சிகள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து பொருத்தமான உத்திகளைப் பின்பற்றும் வரை, நம்பிக்கைக்குரிய மூன்றாவது சக்தியாக உருவெடுப்பது என்பது கனவாகவே இருக்கும். 3வது சக்திக்கு வாய்பு இல்லை என்பதே உள்ளட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/local-body-elections-results-says-no-chance-to-third-front-power-like-seeman-kamal-haasan-and-pmk-in-tamilnadu-355652/