தமிழக அரசியலில், அவ்வப்போது அதிரடியாக பேசி சர்ச்சை புயலைக் கிளப்பும் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளையும் அவர்கள் குடும்பத்து பெண்களையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தமிழக அரசியலில் அவ்வப்போது அதிரடியாகவும் சர்சைக்குரிய வகையிலும் பேசி சர்ச்சை புயலை கிளப்பி வருகிறார். அதனால், ஹெச். ராஜா தொடர்ந்து அவதூறு வழக்குகளில் சிக்கி வருகிறார்.
ஹெச் ராஜா கடந்த 2018ம் ஆண்டு வேடச்சந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பிலான கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும் அவர்களுடைய குடும்ப பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக விருது நகரைச் சேர்ந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் ஹெச் ராஜா நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனால், நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஹெச் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஹெச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
அண்மையில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா ஊடகங்களை ‘prestitute’ என்ற கொச்சையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/court-arrest-warrent-issues-for-bjp-senior-leader-h-raja-352655/