தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் டைரி பற்றிய செய்தியளர்களின் கேள்விக்கு, என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனிதர்களின் சூழ்ச்சி பலிக்காது என்று தெரிவித்தார். மேலும், டைரி எல்லாம் ஒன்றுமே இல்லை, யாரோ என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்று சேகர் ரெட்டி தெரிவித்தார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி, முந்தைய அதிமுக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.
இதையடுத்து, புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்த சூழலில்தான், சென்னையில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டில் 2017 ஆம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது சேகர் ரெட்டியின் வீட்டில் பலகோடி ரூபாய் ரூ 2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ மொத்தம் ரூ 24 கோடியை கைப்பற்றியது தெரியவந்தது.
சென்னை, வேலூரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 14 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன.
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டதாகவும் அதில் முந்தைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்சி சம்பத் உள்பட 12 பேரின் பெயர்கள் இருந்ததாகவும் பரபரப்பாக தகவல்கள் வெளியானது. மேலும், அந்த டைரியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 12 அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக தகவல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர்கள் மறுத்தனர்.
இந்த நிலையில், தொழிலதிபர் சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு- புதுவை ஆலோசனைக் குழுத் தலைவராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகர் பெருமாள் கோயிலில் பதவியேற்றுக் கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற டைரி பற்றியும் அதில் அமைச்சர்களின் படம் இடம்பெற்றுள்ளதையும் அதையோட்டியே தமிழக அரசியலில் விவாதங்கள் நடந்து வருகிறது அதைப் பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினர்.
டைரி பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சேகர் ரெட்டி, “அப்படி டைரி எல்லாம் ஒன்றும் இல்லை. அப்படி ஒரு டைரி இருந்தால் காட்டச் சொல்லுங்கள். அது கற்பனை. யாரோ சிலர் இது போன்று கூறி வருவதால் பிரச்சினை இல்லை. உயர் பதவிகளுக்கு வந்தால் சிக்கல்கள் வருவது இயல்புதான். என்னிடம் தெய்வ சக்தி இருக்கிறது. மனித சூழ்ச்சி பலிக்காது. எனக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.
மேலும், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு ஓய்வு எடுப்பதற்கு சிரமமாக இருப்பதாக கூறுவதால் சென்னையில் இருந்து திருப்பதி செல்பவர்கள் 25 – 30 கி.மீ தொலைவு இடைவெளியில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sekhar-reddy-says-no-diary-i-have-divine-power-so-man-conspiracy-not-victory-351517/