YouTuber Saattai Duraimurugan : குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்கு அனுப்புவதை கண்டித்து 10ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான்.
இத்தனை ஆண்டுகளாக இங்கே கனிம வளங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து இங்கே எந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பேசினார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள் அக்கட்சியினர். அப்போது யூ டியூபர் சாட்டை துரைமுருகன், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பாகத்தை வெட்டி எடுத்துவிட்டனர். இதனால் தென்மேற்கு பருவமழையும், அந்த மழையை நம்பியே இருக்கும் இந்தியா இந்த செயல்களால் பாதிக்கப்படும் என்று பேசினார். மேற்கு கொண்டு வாலியின் பாடலை மேற்கோள் காட்டியும், சீமானின் கொள்கைகளில் குறித்தும் பேசினார்.
கனிம வள கொள்ளை குறித்தும் பேசிய அவர் பல தலைவர்களையும் ஒருமையில் பேசினார். கேரள முதல்வரையும் தமிழக முதல்வரையும் ஒப்பிட்டு பேசிய சாட்டை துரைமுருகன் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மேற்கொண்டு பேசிய அவரை சீமானும் தடுக்கவில்லை. மேடையில் அமர்ந்த வண்ணம் அவர் பேசுவதையும் கேட்டபடியே இருந்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.
சாட்டை துரைமுருகனின் இந்த மோசமான பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கண்டனங்களை பதிவ் செய்தனர். திமுகவினர் பலரும், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீது கன்னியாகுமரியில், முதல்வரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக புகார் கொடுத்தனர் திமுகவினர். தருமபுரி எம்.பி. டாக்டர் செந்தில் குமாரும் இவர் மீது புகார் அளித்திருந்தார்.
திமுகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை திருநெல்வேலி அருகே அவர் கைது செய்யப்பட்டார். 25ம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மனாபபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-saattai-duraimurugan-arrested-for-defaming-speech-353689/