சனி, 5 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 30 ஆயிரம் பேர் மனு தாக்கல்

 5 2 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று, வேட்பு மனு மீதான பரிசீலினை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. இருப்பினும், சீட் இடஒதுக்கீடு காரணமாக நேற்று முன்தினம் வரை மனு தாக்கல் குறைவான அளவிலே இருந்தது. ஆனால் கடைசி நாளான நேற்று மட்டும் 35 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் சீட ஒதுக்கீடு முடிவடைய தாமதம் ஆனதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வரிசையில் நின்று மனுதாக்கல் செய்தனர்.

இறுதிநாளான நேற்று, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டவுன் பஞ்சாயத்துகளுக்கு 3,700 பேரும், 4,300 வேட்பு மனுக்களும் பெறப்பட்டன.

200 வார்டுகளைக் கொண்ட சென்னையில் இதுவரை 3,000 வேட்புமனுக்கள் வந்துள்ளன. சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல் எண்ணிக்கை தொடரும் என்பதால், மொத்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1,400 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனி குமார், பொது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் TNSEC தலைமையகத்தில் செயல்படும் குறைதீர்ப்புப் பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, மொத்தம் 194 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்திட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 18004257072, 18004257073 மற்றும் 18004257074 என்ற கட்டணமில்லா வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் போது வன்முறை அல்லது அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தொகுதி மேம்பாட்டுப் பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஓய்வறை, குடிநீர், சக்கர நாற்காலி, சாய்வுதளம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/over-30k-nominations-filed-on-last-day-for-local-body-election-406751/