மேற்கு உத்தரபிரதேசத்தில் மக்களவை எம்.பி.-யும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசியின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) Z பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. ஒவைசிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு என்பது அவருடைய வீட்டுக்கு இல்லத்தில் அளிக்கப்படும் பாதுகாப்பு மட்டுமில்லாமல், பயணிக்கும்போது 6-8 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“ஓவைசியின் கான்வாய் மீதான தாக்குதல் மற்றும் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு துறை அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவு விரைவில் சிஆர்பிஎஃப்-க்கு வரும்” என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒவைசி, வியாழக்கிழமை மீரட்டில் இருந்து டெல்லிக்குத் திரும்பும் போது அவர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்த உத்தரப் பிரதேச போலீசார், தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
ஓவைசி மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பவர். மேலும், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றுகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் உயர் பாதுகாப்பு அளிக்கப்படும் அசோகா சாலை பகுதியில் உள்ள ஒவைசியின் இல்லத்தை இந்து சேனா குழுவினர் கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தி, பெயர் பலகையை உடைத்து, வீட்டின் மீது கோடாரியை வீசி ஜிஹாதி என்று அவரை வெளியே அழைத்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
ஓவைசி கூறுகையில், வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் டயர் பஞ்சராகி வாகனங்களை மாற்ற வேண்டியிருந்தது. லோக்சபா சபாநாயகரை சந்தித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
போலீசார் கூறுகையில், ஓவைசி வாகனத்தின் மீது 4 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஹபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவா அருகே உள்ள சாஜர்சி சுங்கச்சாவடியில் மாலை 5.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கௌதம் புத் நகரில் உள்ள படல்பூரில் வசிக்கும் சச்சின் சர்மா சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும், உரிமம் இல்லாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். வெள்ளை நிற ஆல்டோ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சச்சின் சர்மாவின் கூட்டாளியாகக் கூறப்படும் சஹாரன்பூரைச் சேர்ந்த ஷுபம் என்பவர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சச்சின் சர்மாவை விசாரித்து வருகின்றனர். ஓவைசியின் பேச்சுக்களால் சர்மா அவர் மீது கோபம் அடைந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சச்சின் சர்மாவின் பேஸ்புக் கணக்கு அவர் பாஜக நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஹரித்வாரில் வெறுப்புப் பேச்சுக்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட யதி நரசிங்கானந்தின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். 2020-ல் டெல்லியில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராம் பக்த கோபாலுக்கு சர்மா தனது ஒரு பதிவில் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் வியாழக்கிழமை கூறியதாவது: “எம்.பி ஓவைசியின் கான்வாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் உள்ள வீடியோ காட்சிகளை ஸ்கேன் செய்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. வீடியோக்களில் இருந்து, சச்சினுக்கு ஒவைசி வியாழக்கிழமை வாகனத்தின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார் – தோட்டாக்களால் உருவாக்கப்பட்ட இரண்டு துளைகள் தெரியும்.இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெளிவாகிறது” என்று கூறினார்.
வாகனத்தின் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததால் 2 துளைகள் விழுந்தது தெரியும்படி வாகனத்தின் புகைப்படத்தை ஓவைசி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
ஓவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் கித்தோரில் (சட்டசபை தொகுதி) இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தோம். நாங்கள் பில்குவா டோல் கேட்டை அடைந்தபோது… நான்கு வாகனங்களில் இருந்தோம்… சுங்கச்சாவடிக்கு (பிளாசா) அருகே தடுப்புகள் இருப்பதால் வேகத்தைக் குறைத்தோம்… பலத்த சத்தம் கேட்டது. அப்போது இன்னொரு சத்தம் கேட்டது. நாங்கள் தாக்கப்படுகிறோம் என்று காரை ஓட்டி வந்த எனது நண்பர் கூறினார். அவர் காரை வேகமாக முன்னோக்கி ஓட்டினார். அப்போது, இன்னொரு சத்தம் கேட்டது.
அதனால், மூன்று நான்கு சுற்றுகள் சுடப்பட்டதாக நான் நினைக்கிறேன். காரின் இடது பக்கத்தில் இரண்டு துளைகளும் இடது மட்கார்டில் ஒரு துளையும் உள்ளது… ஒரு டயர் பஞ்சர் ஆனது. முன்னால் ஒரு மேம்பாலம் உள்ளது. காரை அங்கேயே நிறுத்திவிட்டு நான் வேறு வாகனத்திற்கு மாறினேன். அவர்கள் எங்களைப் பின்தொடர்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி, “எங்கள் முன்னாள் மேயர் மஜித் பயணித்த எனது காருக்குப் பின்னால் ஒரு ஃபார்ச்சூனர் வாகனம் இருந்தது… அந்த காரின் ஓட்டுநர் அதை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் மீது மோதிவிட்டார். அவர் சிவப்பு தொப்பியுடன் கூடிய சட்டை அணிந்திருந்தார்… அவர் கீழே விழுந்தார். அப்போது வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருந்த ஒருவர் ஃபார்ச்சூனர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/aimim-chief-asaduddin-owaisi-z-category-security-406681/