9 2 2022
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டதைப் போன்றே, ஹரியானாவில் பாஜக அரசாங்கம் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடுக்க சட்டத்தை இயற்ற உள்ளது.
ஹரியானாவில் சட்ட விரோதமாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் மசோதா, 2022 அடுத்த மாதம் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட அவையில் பாஜக-ஜேஜேபி கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
ஹரியானாவில் கடந்த சில மாதங்களாக, குறிப்பாக மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் லஜ் ஜிஹாத் என்ற பெயரில் பல சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக அரசு மற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
லவ் ஜிகாத் என்பது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் பயன்படுத்தப்படும். பொதுவாக இந்து பெண்களின் மத நம்பிக்கையை மாற்ற திருமணம் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக கருதப்படும் செயல்பாடுகளை அவர்கள் லவ் ஜிஹாத் என்று அழைக்கின்றனர்.
லவ் ஜிஹாத் என்ற சொல் தற்போது எந்த சட்டங்களிலும் வரையறுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் இந்த பதத்தை பயன்படுத்தவில்லை என்றும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. ஆனாலும் கூட பரவலாக அனைத்து அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் உரைகளில் இது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
சட்டம் இயற்றப்பட உள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வர் மனோகர் லால் கட்டார், கட்டாய மதமாற்றம் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க ஒரு சட்டம் தேவை என்று கூறினார்.
மக்கள் ஏதாவது தவறு செய்யத் தொடங்கும் போது அவர்களைத் தடுக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்படுகிறது. ஹரியானாவின் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒன்றிரண்டு நிகழ்வுகள் அரங்கேறும் போது இத்தகைய சட்டம் தேவைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போது வற்புறுத்தல் மற்றும் காதல் மூலமாக கட்டாய மதமாற்றம் அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இத்தகைய சட்டங்கள் தேவைப்படுகின்றன. . உதாரணமாக, நகல் எதிர்ப்பு மசோதாவை நாங்கள் நிறைவேற்றியதற்கு இதுவே காரணம் என்று என்னால் கூற முடியும். இந்தச் சம்பவங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதைத் தடுக்க சட்டங்கள் தேவை என்றும் அவர் கூறினார்.
இதுவரை முன்மொழியப்பட்ட சட்டத்தின் முன்னேற்றம் என்ன, இப்போது என்ன நடக்கிறது?
முதல் கட்டமாக, முன்மொழியப்பட்ட மசோதாவின் வரைவுக்கு முதல்வர் கட்டார் தலைமையிலான ஹரியானா அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது. மார்ச் 2-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
90 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஹரியானா சட்டமன்றத்தில் பாஜக – ஜே.ஜே.பி. கூட்டணியின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இந்த பலம், மசோதா சுமூகமாக நிறைவேறுவதை உறுதி செய்கிறது. மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற்றவுடன் இது அரசிதழில் அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வரைவு மசோதா என்ன முன்மொழிகிறது?
தவறான விளக்கம், வற்புறுத்தல், செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி திருமணத்திற்காக மதமாற்றம் செய்து கொள்வதை இந்த வரைவு குற்றம் என்று கூறுகிறது.
அது வழங்கும் காரணங்கள் என்ன?
வரைவு மசோதாவில் உள்ள குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையில், மதத்தின் சுதந்திரத்திற்கான தனிமனித உரிமையை மதமாற்றம் செய்வதற்கான கூட்டு உரிமையாக விரிவுபடுத்த முடியாது; ஏனெனில் மதச் சுதந்திரத்திற்கான உரிமை மதம் மாறுபவருக்கும், மதம் மாற விரும்பும் நபருக்கும் சமமாக உள்ளது;
நம்மைப் போன்ற பன்-மதங்களைக் கொண்ட சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன. போலி சமூக அமைப்புகள், மற்ற மதங்களில் பாதிக்கப்படக் கூடிய விளிம்பு நிலை மக்களை மதமாற்றும் மறைமுக நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையற்ற செல்வாக்கின் கீழ் மக்கள் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு என்று வரைவு மசோதா கூறுகிறது.
“லவ் ஜிஹாத்” எனப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் வரைவு மசோதா தெரிவிக்கிறது. “பிற மதத்தினரை மதமாற்றம் செய்வதன் மூலம் தங்கள் சொந்த மதத்தின் பலத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி நிரலுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தங்கள் சொந்த மதத்தை தவறாக சித்தரித்து அல்லது மறைத்து மற்ற மதத்தினரை திருமணம் செய்துகொள்வதும், திருமணம் செய்த பிறகு அவர்களை தங்களின் மதத்திற்கு மாறக் கூறி கட்டாயப்படுத்துவதும் சமீப காலமாக பல இடங்களில் அரங்கேறி வருகிறது என்றும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் அவ்வாறு மதம் மாறிய நபர்களின் மதச் சுதந்திரத்தை மீறுவது மட்டுமின்றி, நமது சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு எதிராகவும் செயல்படுகிறது. எனவே வற்புறுத்தியோ, தவறாக சித்தகரித்தோ, தேவையற்ற வகையிலோ நிகழ்த்தப்படும் மத மாற்றங்களைத் தடுக்க இந்த மசோதா முயல்கிறது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலின, பட்டியல் பழங்குடி மக்கள் இடையே இத்தகைய மதமாற்றம் அதிக தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் எவ்வாறு ஒரு மதமாற்றம் சட்டத்திற்கு புறம்பானது என்பதை நிரூபிக்க முடியும்?
திருமணத்திற்காக, அல்லது திருமணத்தின் மூலம் வற்புறுத்தியோ, தவறாக சித்தகரித்தோ அல்லது செல்வாக்கை பயன்படுத்தியோ நிகழும் மதமாற்றம் குற்றமாக கருதப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுகிற ஒவ்வொரு தனிநபரும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு சட்ட விரோதமான வழியிலும் மதமாற்றம் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேல் குறிப்பிட்ட காரணங்கள் எனும் பட்சத்தில் அதனை அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும். முன்மொழியப்பட்ட மசோதாவில் மதத்தை மறைத்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கும் அம்சமும் அதில் இடம் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.