செய்தியாளர் க.சண்முகவடிவேல்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்:-
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போராட்டம்-வன்முறை:-
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் படுகாயம் அடைந்தனர்.
பள்ளி சூறை:-
இதனைத்தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது. வன்முறையாளர்கள் பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை டிராக்டர் கொண்டு மோதி உடைத்து சேதப்படுத்தினர்.
இதனையடுத்து கலவரக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போதிய அளவில் போலீஸார் அங்கே இல்லாததால் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.
டி.ஐ.ஜி. பாண்டியன் காயம்
கலவரத்தை கட்டுப்படுத்த வந்த டி.ஐ.ஜி.பாண்டியன் மீது கலவரக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பள்ளி வளாகத்தில் நுழைந்த கலவரக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
சின்னசேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் போலீஸார் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் நடந்த கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி கடிதம்:-
மாணவி எழுதிய கடிதம் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றபட்டுள்ளது. ஆசிரியர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிபிசிஐடி விசாரணைக்கு தேவை இருக்காது. பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும் .உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும்.
வீடியோ காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டும். அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறியுள்ளது.
டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை:-
இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பக்கூடாது. போராட்டம் நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நிலையில் ஸ்ரீமதியின் உறவினர்கள் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னசேலத்தில் ஏற்பட்ட வன்முறை வேறு மாவட்டங்களுக்கும் பரவி விடக்கூடாது என்பதன் அடிப்படையில் கடலூரில் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தில் தற்போது கலைத்து வருகின்றனர்.
சின்னசேலம் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த திருச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படை வீரர்கள் கலவரப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் கூடுதல் போலீஸாரைக்கொண்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த அமைதியான போராட்டம் திடீர் கலவரமானதற்கு வேறு எவரேனும் காரணமா என்ற கோணத்தில் தற்போது போலீஸார் ஆய்வு நடத்தி விசாரணையை துரிதப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kallakurichi-school-girl-death-protesters-set-school-buses-and-police-vehicles-on-fire-480645/