ஐ.ஐ.எஸ்.சி-யில் 3 புதிய பி.டெக் படிப்புகள் அறிமுகம்; ஜே.இ.இ அட்வான்ஸ்டு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை
ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு ஏற்கனவே பி.எஸ்.சி (Bachelor of Science - Research) மற்றும் பி.டெக் (Mathematics and Computing) ஆகிய இரண்டு இளங்கலை படிப்புகளை வழங்கி வருகிறது. நிறுவனம் தனது பி.டெக் (கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங்) படிப்பிற்கு ஜே.இ.இ அட்வான்ஸ்டு மதிப்பெண்கள் மூலம் ஐ.ஐ.எஸ்.சி சேர்க்கை இணையதளம் வழியாக மாணவர்களை அனுமதித்து வருகிறது.
இந்த புதிய இளங்கலை படிப்புகள், வளர்ந்து வரும் மற்றும் பல்துறை சார்ந்த துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னெடுக்கும் அடுத்த தலைமுறை பொறியாளர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடிப்படை அறிவியல், முக்கிய பொறியியல் கோட்பாடுகள் மற்றும் நவீன கணக்கீட்டு கருவிகளை ஒன்றிணைப்பதன் மூலம், தேசம் மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலான சவால்களை எதிர்கொள்ள இந்தப் படிப்புகள் உதவும் என்றும் அது சேர்த்துக் கூறியது.
ஆரம்ப செமஸ்டர்களில் பொறியியல், கணிதம் மற்றும் கணக்கீட்டு முறைகளின் முக்கிய பாடங்களை ஒருங்கிணைத்து, ஒரு வலுவான அடிப்படை பாடத்திட்டத்தை வழங்க இந்தப் பாடப்பிரிவுகள் முயலுகின்றன.
இந்தப் படிப்புகளில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள் பகுப்பாய்வு, கணக்கீடு மற்றும் நடைமுறைத் திறன்களின் தனித்துவமான கலவையைக் கொண்டிருப்பார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள கல்வித்துறை, தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அவர்களுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு, ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Roorkee), ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 தேர்வை நடத்தும் நிறுவனமாகும். ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 தேர்வு மே 17-ம் தேதி நடைபெற உள்ளது.
ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2026 விண்ணப்பத்திற்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ மெயின் (JEE Main) 2026 தேர்வின் பி.இ/பி.டெக் தாளில் (அனைத்து பிரிவுகளையும் சேர்த்து) முதல் 2,50,000 இடங்களுக்குள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 2001 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு இதில் தளர்வுகள் உண்டு. ஒரு விண்ணப்பதாரர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக இரண்டு முறை ஜே.இ.இ அட்வான்ஸ்டு எழுதலாம். மேலும், 2025 அல்லது 2026-ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடங்களாகக் கொண்டு முதல்முறையாக 12-ம் வகுப்பு (அல்லது அதற்கு இணையான) தேர்வை எழுதியிருக்க வேண்டும்.





