எழுதியவர்: அபூர்வா விஸ்வநாத்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் முடிவு, ஆளுநரின் அதிகாரத்திற்கும் மக்களின் ஜனநாயக ஆணைக்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
வழக்கமாக, தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, அவர்கள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு விஜய்யிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. தவெக தற்போது 108 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ளது; காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த எண்ணிக்கை 113 ஆக உயர்கிறது.
ஆளுநரின் அதிகாரம் குறித்த அரசியலமைப்புச் சட்டம்
அரசியலமைப்புச் சட்டத்தின் 164-வது பிரிவு, முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார் என்றும், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மற்ற அமைச்சர்களை ஆளுநர் நியமிப்பார் என்றும், ஆளுநர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவியில் நீடிப்பார்கள் என்றும் கூறுகிறது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த, மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சியை ஆளுநர் அழைக்கிறார். பின்னர், முதலமைச்சராக நியமிக்கப்பட்டவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒரு நேரத்தை நிர்ணயிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்
தனிப்பெரும் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைகளின் அரசியல் தன்மை காரணமாக, ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியுள்ளன.
2018-ல், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பி.எஸ். எடியூரப்பாவை முதலமைச்சராகப் பதவியேற்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி(எஸ்) கட்சிகள் நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடின. காங்கிரஸ் மற்றும் ஜே.டி(எஸ்) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அறிவித்திருந்த போதிலும், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநர் அழைத்திருந்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா இரவு முழுவதும் வழக்கை விசாரித்தார், ஆனால் பதவியேற்புக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஒரு நாள் கழித்து, குதிரை பேரம் நடப்பதாகக் கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கால அவகாசத்தை 36 மணிநேரமாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. இறுதியில், பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது.
மே 2016-ல் உத்தராகண்டில் ஏற்பட்ட இதேபோன்ற நெருக்கடியின் போதும், சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பே "இறுதியானது" என்று உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத்தை சபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், பதவியேற்பைத் தாமதப்படுத்தும் ஆளுநரின் நடவடிக்கை ஒரு கண்ணியமற்ற தந்திரம். ஆளுநரின் அரசியலமைப்புச் சட்ட அதிகாரம், ஜனநாயக அரசியலின் அடிப்படை அறத்திற்கும் மக்களின் தீர்ப்புக்கும் முரணாக இருக்கக் கூடாது. விஜய்யின் பதவியேற்பைத் தாமதப்படுத்துவது அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டும் செயல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது," என்று தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/explained/tvk-vijay-swearing-in-delay-tamil-nadu-governor-rajendra-arlekar-11812156





