சனி, 9 மே, 2026

சிலிக்கான் வேலியில் கால்பதிக்கும் சென்னை ஐ.ஐ.டி: அமெரிக்காவில் ரூ.62 கோடி மதிப்பில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்

 select usa

சென்னை ஐ.ஐ.டி. தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை அமெரிக்காவின் மென்லோ பார்க் (சிலிக்கான் வேலி) பகுதியில் தொடங்கியுள்ளது. சுமார் ரூ.62 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்திய ஸ்டார்ட்அப்களை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக அமையும்.

சென்னை ஐ.ஐ.டி. தனது முதல் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை அமெரிக்காவின் மென்லோ பார்க் (சிலிக்கான் வேலி) பகுதியில் தொடங்கியுள்ளது. சுமார் 7.5 மில்லியன் டாலர் (ரூ.62 கோடி) முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்திய ஸ்டார்ட்அப்களை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக அமையும். இதன் முழு விவரம் இங்கே.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐ.ஐ.டி) சர்வதேசப் பிரிவான 'ஐ.ஐ.டி.எம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்', அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மென்லோ பார்க் பகுதியில் தனது முதல் மையத்தை அமைப்பதாக 2026, மே 6 அன்று அறிவித்தது. இந்தியாவின் 'ஆழ்ந்த தொழில்நுட்ப' (டீப்-டெக்) கண்டுபிடிப்புகளை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த அறிவிப்பு செலக்ட் யு.எஸ்.ஏ (SelectUSA) முதலீட்டு உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்டது.

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கு இடையே ஒரு முன்னோடி நடவடிக்கையாகப் பார்க்கப்படும் இத்திட்டம், இந்திய ஆராய்ச்சி, புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்கள்) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நேரடியாக உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் உத்தியைப் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த மையம், 2026 ஏப்ரல் 24 அன்று தொடங்கப்பட்டது. இது சி.ஏ. ஸ்டார்ட்அப்ஸ் (CA Startups) அமைப்புடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.

இந்த மையம் குறித்து சென்னை ஐ.ஐ.டி இயக்குநரும், ஐ.ஐ.டி.எம் குளோபல் தலைவருமான பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், “அமெரிக்காவிற்குள் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கம், இந்திய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் சென்னை ஐ.ஐ.டி-யின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். மென்லோ பார்க் மையம், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வித்துறையுடன் ஆழமான ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கும்,” என்றார்.

இந்த மையம் மொத்தம் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும். சிலிக்கான் வேலிக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இந்தியப் புத்தாக்க நிறுவனங்கள் உலகளாவிய முதலீடு மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு இது ஒரு நுழைவாயிலாக அமையும்.

ஐ.ஐ.டி.எம் குளோபல் இயக்குநர் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறுகையில், “இந்த மையம் இந்தியா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும்,” என்றார். சர்வதேசத் தொடர்புப் பிரிவின் டீன் பேராசிரியர் பிரீதி அகலாயம், "மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சர்வதேச அளவில் வாய்ப்புகளைப் பெற இது உதவும்" என்று குறிப்பிட்டார்.

இந்த மென்லோ பார்க் மையம் புத்தாக்க நிறுவனங்களை வளர்த்தெடுப்பதோடு, உலகச் சந்தைக்கான வாய்ப்புகளையும் வழங்கும். மேலும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியிலும் ஒரு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.எம் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி திருமலை மாதவ்நாராயண், "ஆய்வகக் கண்டுபிடிப்புகளை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லும் பாலமாக இது இருக்கும்" என்றார்.

செலக்ட் யு.எஸ்.ஏ என்பது அமெரிக்காவில் வணிக முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டாட்சித் திட்டமாகும். இதன் முதலீட்டு உச்சிமாநாடு பன்னாட்டு நிறுவனங்களை அமெரிக்கப் பொருளாதார அமைப்புகளுடன் இணைக்கும் 4 நாள் நிகழ்வாகும்.

சென்னை ஐ.ஐ.டி குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்:

இது சென்னை ஐ.ஐ.டி-யின் சர்வதேசப் பிரிவாகும். இது உலகளாவிய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும், இந்தியப் புத்தாக்க நிறுவனங்களைச் சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் செயல்படும் அமைப்பாகும்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-launches-deep-tech-hub-in-menlo-park-usa-silicon-valley-11815573