/indian-express-tamil/media/media_files/2026/05/09/rahul-gandhi-2-2026-05-09-06-43-00.jpg)
ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகச் சாடிய முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கடினமான காலங்களில் தனது கூட்டாளிகளைக் கைவிடுபவர் தான் அல்ல என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆகியோருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, "சவாலான காலங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" என்று எழுதியுள்ளார்.
தமிழகத் தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்ற நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் த.வெ.க கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்ததும், தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதுமே இந்த விமர்சனத்திற்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது. த.வெ.க தற்போது பெரும்பான்மையை எட்ட எம்.எல்.ஏ-க்களைத் திரட்டி வரும் நிலையில், தேர்தல் முடிவுக்குப் பின் காங்கிரஸ் கட்சி மாறியதை ஒரு தரப்பு தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அகிலேஷ் யாதவின் இந்த சமூக வலைதளப் பதிவு, அவர் கொல்கத்தாவிற்குச் சென்று மம்தா பானர்ஜியைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து வந்துள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதை ஏற்க மறுத்துள்ள மம்தா, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அகிலேஷின் பதிவை ஆதரித்துப் பேசுகையில், காங்கிரஸ் இந்தியா கூட்டணியைச் சரியாக வழிநடத்தவில்லை என்றும், தமிழகத்தில் தனது நம்பிக்கைக்குரிய கூட்டாளியான தி.மு.க-வை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினர். "காங்கிரஸ் அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறது என்பதும், தி.மு.க-வை அது கைவிட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இது பொறுப்பான அரசியல் அல்ல" என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். "யார் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்? மக்கள் நலனுக்காக கடைசியாக எப்போது சமாஜ்வாதி கட்சி நின்றது? குஷிநகரில் ஒரு மசூதி இடிக்கப்பட்டபோது சமாஜ்வாதி கட்சியின் நகராட்சித் தலைவர்தான் அதற்கு உத்தரவிட்டார். அப்போது அந்தத் தலைமை என்ன செய்தது? ஒன்றுமில்லை. சமூக வலைதளங்களில் மட்டும் பதிவிடுவது அரசியலுக்குப் போதாது" என்று கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் சாடியுள்ளார்.
2027 உ.பி. சவால்
2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் போட்டி நிலவப்போகிறது. இரு கட்சிகளின் மேலிடத் தலைவர்கள் நல்லுறவைப் பேணுவது போலத் தெரிந்தாலும், மாநில அளவிலான நிர்வாகிகள் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலின் போதும், தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய இழுபறி நிலவியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை காலை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், அகிலேஷ் யாதவின் கருத்து குறித்து நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார், ஆனால் "இது போராட வேண்டிய நேரம்" என்று கூறினார். "பாஜகவை எதிர்க்க வேண்டிய நேரம் இது, அதை நாங்கள் செய்து வருகிறோம். ராகுல் காந்தி அனைத்து நிலைகளிலும் பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடி வருகிறார், நாங்கள் அதைத் தொடர்வோம். எந்தவொரு தலைவரின் பதிவைப் பற்றியும் நான் கருத்து கூற விரும்பவில்லை," என்று ராய் கூறினார்.
பீகார் (ஆர்.ஜே.டி), தமிழ்நாடு (தி.மு.க) மற்றும் மேற்கு வங்கம் (டி.எம்.சி) ஆகிய மாநிலங்களில் அந்தந்தக் கட்சிகள் பாஜக அல்லது அதன் கூட்டணிகளிடம் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், இப்போது அனைவரின் பார்வையும் உத்தரப் பிரதேச தேர்தல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மீதே உள்ளது.
அகிலேஷ் யாதவின் இந்தச் சமூக வலைதளப் பதிவு, 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மந்தமாக இருக்கும் இந்தியா கூட்டணிக்குள்ளான மோதல்களையும், கடந்த சில ஆண்டுகளாகச் சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கூட்டணி சந்தித்து வரும் பின்னடைவுகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/akhilesh-yadav-veiled-attack-on-congress-dmk-stalin-mamata-banerjee-tamil-nadu-politics-11815478





