அடுத்த டார்கெட் கியூபா தான்... 100 மைல் தொலைவில் போர் கப்பலை நிறுத்துவோம்; ஓபனாக சொன்ன டிரம்ப்
/indian-express-tamil/media/media_files/2026/05/02/trump-2026-05-02-08-35-51.jpg)
ஈரானுடன் மோதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா தற்போது கியூபா மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கியூபா அரசாங்கம் மற்றும் அதன் துணை நிறுவனங்களைக் குறிவைத்து தனது நிர்வாக தடைகளை விரிவுப்படுத்திய நிலையில் அமெரிக்காவால் கியூபாவை உடனடியாக கைப்பற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், “கியூபாவை நாம் உடனடியாக கைப்பற்றுவோம். அங்கு பிரச்சனைகள் இருக்கிறது. திரும்பி வரும் வழியில் எங்களது பெரிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றை வரவழைப்போம். கரையில் இருந்து சுமார் 100 மையில் தொலைவில் நிறுத்துவோம். அப்போது அவர்கள் நாங்கள் சரணடைகிறோம் என்று சொல்வார்கள்” என்றார். ஈரான் தொடர்பான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை அமையக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் பாதுகாப்பு எந்திரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், எரிசக்தி, சுரங்கம், நிதிச் சேவைகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை குறிவைத்து தடைகளை விரிவுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவொரு வெளிநாட்டு நபர் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கிறது. மேலும், கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுடன் வணிகம் செய்பவர்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது என்றார்.
தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுடன் இருப்பதாக கூறப்படும் தொடர்புகளைக் சுட்டிக்காட்டி, ஹவானா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கியூபா இதனை நிராகரித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பரிலா கூறுகையில், இந்தத் தடைகள் சர்வதேச சட்டத்தை மீறும் ஒருதலைப்பட்சமான கட்டாய நடவடிக்கைகள். கியூபா மீதோ அல்லது பிற நாடுகள் மீதோ நடவடிக்கைகளைத் திணிக்க அமெரிக்காவிற்கு எந்தவித உரிமையும் இல்லை. அவர்கள் எங்களை அச்சுறுத்த முடியாது என்றார்.





