தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஷ்வனி குமார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதே ஆளுநரின் சரியான செயல்பாடாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மே 7, 2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்கள் மிகத்தெளிவான மற்றும் மாபெரும் வெற்றியை (Deafening popular mandate) வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், முறைப்படியான வழிமுறைகளை மேற்கொள்வதாக ஆளுநர் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள், விஜய்யின் பதவியேற்பு விழாவை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒரு கண்ணியமற்ற தந்திரமாகவே பார்க்கப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசியல் சாசன மரபுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய அஷ்வனி குமார், ஒரு கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது, அதற்கு வாய்ப்பளிப்பதும், சட்டப்பேரவையில் அந்தப் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதுமே சரியான அரசியல் சாசன நடைமுறையாகும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, தாமதிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பதே ஆளுநரின் கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/governors-duty-to-invite-vijay-for-floor-test-former-law-minister-ashwani-kumar-11812024





