வெள்ளி, 8 மே, 2026

நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்

 

teesha

வங்க தேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, அந்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான தீஸ்தா நதி மேலாண்மைத் திட்டத்திற்கு (TRCMRP) சீனாவின் ஆதரவை கோரியுள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வங்க தேசத்தின், தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் 'பெல்ட் அண்ட் ரோட்' (Belt and Road) திட்டத்தின் கீழ் ஒத்துழைக்கத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

தீஸ்தா நதி விவகாரத்தில் இந்தியா நீண்டகாலமாகத் தீர்வு காண முயன்று வரும் நிலையில், வங்க தேசம் சீனாவின் உதவியை நாடியிருப்பது இந்தியாவிற்கு கவலை அளித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் 'சிலிகுரி காரிடார்' பகுதிக்கு அருகில் இத்திட்டம் அமைவது பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது இந்தியா - வங்க தேச உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 1996-ல் இந்தியா - வங்க தேசம் இடையே கையெழுத்தான 30 ஆண்டுகால கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதைப் புதுப்பிப்பதில் சிக்கல் நீடிக்கும் வேளையில், தீஸ்தா நதி விவகாரம் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

1975- ஆம் ஆண்டு முதல் சீனா வங்க தேசத்திற்கு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. ஜப்பான், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அடுத்தபடியாக சீனா வங்க தேசத்தின் நான்காவது பெரிய கடன் வழங்குநராக மாறியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, 'ஒன் சீனா' (One-China) கொள்கைக்குப் வங்க தேசம் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு, வங்க தேசத்தின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் சீனா துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


source https://tamil.indianexpress.com/international/bangladesh-seeks-chinas-backing-for-teesta-river-project-read-full-story-11810742