காங்கிரஸ் ஆதரவு; ஆனால் இந்த ஒரு நிபந்தனை: தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு முடிவு
இந்த இக்கட்டான சூழலில், தமிழக காங்கிரஸ் கமிட்டி விஜய்யின் த.வெ.க-விற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆன்லைன் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை இணைந்து எடுத்த முடிவின்படி, விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் ஒரு முக்கியமான நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது.
காங்கிரஸின் முக்கிய நிபந்தனை
தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ், த.வெ.க தலைவர் விஜய் எந்தச் சூழலிலும் பா.ஜ.க-வின் ஆதரவையோ அல்லது பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவையோ கோரக்கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளது. தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு பா.ஜ.க வேட்பாளரின் ஆதரவைக்கூட விஜய் பெறக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சித் தலைமை மிகவும் கறாராக உள்ளது.
இது குறித்து டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கே.சி. வேணுகோபால், "தமிழக மக்களின் தீர்ப்பு என்பது ஒரு மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதையே காட்டுகிறது. அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அரசையே காங்கிரஸ் விரும்புகிறது" என்று குறிப்பிட்டார்.
ஆட்சி அமைப்பதில் உள்ள சவால்கள்
விஜய் இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) வெற்றி பெற்றுள்ளதால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய நேரிடும். இதனால் த.வெ.க-வின் பலம் 107 ஆகக் குறையும். 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. காங்கிரஸ் பெற்றுள்ள 5 இடங்கள் த.வெ.க-விற்கு கிடைத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 5 அல்லது 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு விஜய்க்குத் தேவைப்படுகிறது.
இதனை முன்னிட்டு, த.வெ.க தரப்பிலிருந்து சி.பி.எம் (CPI-M) கட்சியிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது. சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற உள்ளது. அதன் பிறகே அக்கட்சியின் நிலைப்பாடு தெரியவரும். இதற்கிடையில், அ.தி.மு.க-வின் வெற்றி வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், த.வெ.க மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளார்.
ஆளுநரைச் சந்திக்கும் விஜய்
தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில், நடிகர் விஜய் இன்று (மே 6) தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் அல்லது கூடுதல் அவகாசம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியின் வாழ்த்துகளுக்குப் பதிலளிக்கையில், அரசியல் எல்லைகளைக் கடந்து மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் த.வெ.க பாடுபடும் என்று உறுதியளித்துள்ளார்.





