ஆட்சி அமைக்க கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகின. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) யாரும் எதிர்பார்க்காத வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருப்பினும், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் த.வெ.க-விற்குத் தேவைப்படுகின்றன.
த.வெ.க தலைவர் விஜய் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். விதிகளின்படி அவர் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், சபாநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பதால், அவையில் த.வெ.க-வின் பலம் 106-ஆக குறைய வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழலில், மெஜாரிட்டியை நிரூபிக்க அக்கட்சிக்கு 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைத் திரட்டும் நோக்கில், த.வெ.க தலைவர் விஜய் முக்கிய கட்சிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் தலைமையுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதிப்படும் வகையில் நகர்வுகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் (2 எம்.எல்.ஏ-க்கள்) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் ஆதரவு கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது த.வெ.க-வின் பக்கம் சாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியலை எதிர்ப்பதாகக் கூறிவரும் விஜய், அதே கொள்கையுடைய மதச்சார்பற்ற கட்சிகளைத் தன்பக்கம் இழுப்பதன் மூலம் தமிழகத்தில் புதிய ஆட்சியை நிறுவத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்படுமா அல்லது இந்த கட்சிகள் த.வெ.க-விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
6 5 2026





